ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியத்திற்கு புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் நியமித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுச்சேரியில் கடந்த 11 ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கிக் கிடந்த வக்ஃப் வாரியத்தை தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வக்ஃப் வாரியம் என்பது இஸ்லாமிய அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாக்கவும், அவற்றை சமூக நலனுக்காக நிர்வகிக்கவும் அமைக்கப்பட்ட ஒரு முக்கியமான அமைப்பாகும். ஆனால் புதுச்சேரி அரசு தற்போது எடுத்துள்ள முடிவு அந்த அமைப்பின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் முஸ்லிம் அல்லாத இரு நபர்களை வாரியத்தில் நியமித்துள்ள முதல் மாநிலம் என்ற தேவையற்ற முன்னுதாரணத்தை புதுச்சேரி உருவாக்கியுள்ளது.
இது நாட்டின் பிற பகுதிகளிலும் தவறான நடைமுறைக்கு வழிவகுக்கும் அபாயகரமான செயல் ஆகும். மேலும், இந்த நியமனம் புதுச்சேரி முதலமைச்சர் திரு ரங்கசாமி சுயாதீனமாக செயல்பட வில்லை என்பதையும், அவர் முழுமையாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் அரசியல் அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறார் என்பதையும் வெளிப்படையாக உணர்த்துகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் அரசியல் சோதனை நிலமாக புதுச்சேரியை மாற்ற முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வக்ஃப் வாரியத்தில் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களை திட்டமிட்டு நுழைத்திருப்பது முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி, அச்சம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களை இவ்வாறு திணிப்பது சமூக ஒற்றுமையையும் அமைதியையும் பாதிக்கும் செயலாகும். எனவே, சிறுபான்மையினரின் உணர்வுகளையும் ஜனநாயக நெறிகளையும் மதித்து, இந்த சர்ச்சைக்குரிய நியமனங்களை புதுச்சேரி அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் தகுதியும் நம்பகத்தன்மையும் கொண்ட முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை கொண்டு வக்ஃப் வாரியத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று கோருகிறேன்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/1033-2026-03-07-14-22-57.jpg)