பூனையின் பெயரில் குடியிருப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்யப்பட்டிருப்பது பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி அடங்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
இந்த நிலையில், பூனைக்கு குடியிருப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கெளஷல் படேல். இவர் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் சாதி சான்றிதழ் தொடர்பான ஒரு விண்ணப்பத்தைப் பற்றி விசாரிக்க , பீகார் லோக் சேவா கேந்திரா (RTPS) என்ற அரசு அலுவலகத்தில் உள்ள கவுண்டருக்குச் சென்ற போது, அதே முகவரியில் ‘கேட் குமார்’(Cat kumar) என்ற பெயரில் தவறான விவரங்களுடன் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளார். மேலும், பூனையின் புகைப்படத்தோடு விண்ணப்பதாரரின் தந்தை கேட்டி பாஸ் (catty boss) எனவும் தந்தை கேட்டியா தேவி (Catiya Devi) எனவும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை அவர் கண்டறிந்தார்.
அரசாங்க செயல்முறைகளை கேலி செய்வதற்கும் ஆன்லைன் அமைப்பை சுரண்டுவதற்கும் இது ஒரு முயற்சி என்று முடிவு செய்த கெளஷல் படேல், இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், அரசுப் பணிகளைத் தடுத்தல், சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது நஸ்ரிகஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னதாக, மசெளரியில் ‘நாய் பாபு’ என்ற பெயரில் சாதி சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. அதில் பெற்றோர்கள் ‘குட்டா பாபு’ மற்றும் ‘குட்டியா பாபு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து போஜ்புரி நடிகை மோனலிசாவின் புகைப்படத்தோடு ‘சோனாலிகா டிராக்டர்’ என்ற பெயரிலும், ராமர் என்ற பெயரிலும், காகம் என்ற பெயரில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. பீகார் பொது சேவை உரிமைச் சட்டத்தின் கீழ் மாநிலத்தில் வசிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பமும் உரிய சரிபார்ப்புக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியால் மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கியதில் இருந்து, ஏராளமான குடியிருப்பு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 11 ஆவணங்களில் இதுவும் ஒன்று என்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.