Advertisment

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

hc

பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்காக ரிப்பன் மாளிகை வளாகம் நேற்று (13.08.2025) மாலை முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

Advertisment

இந்நிலையில் தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் தலைமை நீதிபதி அமர்வில் இன்று (14.08.2025) வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்பவர் முறையிட்டார். அப்போது, “நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவர்களோடு, இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களும் அழைத்துச் செல்லப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த போராட்டத்தை வழிநடத்திய வழக்கறிஞர் பாரதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து காவல்துறை எந்த ஒரு தகவலும் தெரிவிக்க மறுக்கிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள பலருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்” என முறையீடு செய்யப்பட்டது. 

இதையடுத்து நீதிபதி, “இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார். அதே சமயம் இது தொடர்பாகத் தலைமை நீதிபதி அமர்விலும் முறையிடப்பட்டது. அதில், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது அனைவரும் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டார்கள். எனவே தொடர்ச்சியாகப் போராட்டத்தை நடத்துவதற்கு அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என முறையிடப்பட்டது. அதற்குத் தலைமை நீதிபதி, “இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தால் அந்த மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த முறையீட்டைக் கொண்டு எந்த உத்தரவும் தற்போது கேட்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்

tn govt appeal sanitary workers chennai corporation high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe