சட்டவிரோதமாக கட்டப்பட்ட 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் விரார் மாவட்டம் விஜய் நகர் பகுதியில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று (27-08-25) இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேசிய மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி தொடர்வதாகக் கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் சிக்கி சுமார் 25 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மொத்தம் 50 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இடிந்து விழுந்த பகுதியில் 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதனால், குடியிருப்புகளில் வசிப்பவர்களை முன்னெச்சரிக்கைக்காக வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. அதன் பேரில், கட்டடக் கலைஞர் நிடல் கோப்நாத் சானேவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.