தமிழக முதல்வரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் தற்போது ஓபிஎஸ் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு இன்று (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அதனுடைய தலைவர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலே இருந்த உறவு முறிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகி இருக்கும் நிலையில் இன்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் உதயநிதி வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் நடைபெற்ற சந்திப்பு மற்றும் நலம் விசாரிப்பிற்கு பின் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/31/a4618-2025-07-31-18-53-03.jpg)
அப்போது அவர் பேசுகையில், ''உடல்நலம் குறித்து முதல்வரிடம் விசாரித்தேன். அவருடைய அண்ணனின் மறைவுக்கு ஆறுதல் சொன்னேன். அரசியலில் நிலையான நண்பனும் இல்லை எதிரியும் இல்லை'' என்றார். 'திமுக கூட்டணியில் நீங்க இணைய வாய்ப்பிருக்குமா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ''தேர்தல் நெருங்கும் பொழுது எதுவும் நடக்கலாம். அது உங்களின் யூகம். கூட்டணி அமைத்து ஜெயித்திருக்கிறார்கள், தோற்றிருக்கிறார்கள். ஜனநாயகத்தில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. ஜெயலலிதாவிடம் 25 ஆண்டுகள் நேரடிப் பார்வையில் பணியாற்றி இருக்கிறேன். அரசியல் ரீதியாக, கட்சி ரீதியாக அனைத்தும் எனக்கு தெரியும். இன்றைய கால சூழ்நிலையில் ஒரு வருத்தம் இருக்கிறது. மக்களவையில் சமக்ர சிக்ஷா நிதியுதவி பற்றி ஒரு கேள்வி எழுப்புகின்ற பொழுது மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. அதனால் தான் அந்த நிதியை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று சொல்லுகின்ற ஒரு சூழல் கல்வி அமைச்சருக்கு இருக்கிறது. அது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல என்பது என்னுடைய தனிப்பட்டக் கருத்து.
இன்றைக்கு இருக்கின்ற கட்சிகளிலேயே மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி ஜனநாயகக் கடமையை செய்யத் தவறிய அத்தனை பொருள் பற்றியும் நான் தினந்தோறும் அறிக்கை வாயிலாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். மோடியுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள். தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் நானும் கூட்டணி குறித்து பேசவில்லை. அவரும் பேசவில்லை'' என்றார்.