பா.ஜ.க.வுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி கடந்த 17ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார். அந்த வகையில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2025) கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், “இப்போது ஏன் பா.ஜ.க.வினர் ராகுல் காந்தி மேல் பாய்கிறார்கள் என்றால், பா.ஜ.க. - தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள். மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க.வின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதைத்தான் பீகாரில் இப்போது கூடியிருக்கும் இந்தக் கூட்டம் எடுத்துக் காட்டுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கிருக்கும் பாட்னாவில்தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்த பா.ஜ.க.வின் கர்வத்தை தகர்த்த இடம்தான் இந்த பீகார். 

400 இடம் என்று கனவு கண்டவர்களை, 240இல் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள், மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்று, மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும். சகோதரர் ராகுல் காந்தி அவர்களே… நீங்கள் இன்றைக்கு இந்தியாவிற்கான வழக்கறிஞராக இருக்கிறீர்கள். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும். மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று சகோதரர் தேஜஸ்வீ காட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இரண்டு பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும் நிச்சயமாக - உறுதியாக நானும் பங்கேற்பேன்” எனப் பேசினார்.