அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான அன்வர் ராஜா இன்று (21-07-25) முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.கவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்திருந்ததால் அதிருப்தியில் இருந்த அன்வர் ராஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “எந்த காலத்திலும் தமிழக மக்கள், கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டர்கள். தனித்து ஆட்சி என்ற கோஷம் தான் தமிழ்நாட்டில் எடுபடும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை அதிமுக பிடிக்கப் போகிறது என்றால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி தான் என பா.ஜ.க நிர்பந்தித்தால் அதற்கு அதிமுக பணியாது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கூட்டணிக்குத் தலைமை தாங்கப் போவது அதிமுக தான். இதனை பா.ஜ.க ஏற்கவில்லை என்றால் இரு கட்சிகளுக்குமான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் காலூன்று துடிப்பது பாஜகவின் எண்ணமாக இருந்தாலும் அது ஒரு போதும் நடக்காது” என்று பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது அதிமுக - பா.ஜ.க இடையில் சலசலப்பை உண்டாக்கியது.

இந்த சூழ்நிலையில் திமுகவில் இணைவதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த அன்வர் ராஜாவை, உடனடியாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அன்வர் ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதன் பின்னர், அவர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “இன்று முதல்வரைச் சந்தித்து என்னை திமுகவில் இணைத்துக் கொண்டேன். பேரறிஞர் அண்ணா தலைமையிலும், அதற்கு பின்னால் வந்த தலைவர்களின் தலைமையிலும் கருத்தியில் ரீதியாக நாங்கள் வளர்ந்தவர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். அண்ணாவின் கொள்கைக்கு புரம்பாக அதிமுக இருக்கிறது. அதிமுக, தனது கொள்கையில் இருந்து தடம்புரண்டு தற்போது பா.ஜ.கவின் கையில் சிக்கியிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான், அதில் பா.ஜ.க இடம் பெறும் என அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். 3 முறை பேட்டியளித்த அவர், ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என குறிப்பிடவில்லை.

Advertisment

10 நாட்களாக எடப்பாடி பழனிசாமி டூர் பிரோகிராமைச் செய்து கொண்டு வருகிறார். அந்த 10 நாளும், நான் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என உறுதிப்படுத்தவே அவரால் முடியவில்லை. அந்தளவுக்கு தான் அவருடைய நிலைமை இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என 20 முறையாவது டிரம்ப் சொல்லியிருப்பார். அதை யாரும் கேட்கவில்லை. அதே போல், எடப்பாடி பழனிசாமி நான் தான் முதல்வர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதிமுகவை சீரழிப்பதற்காக தான் அதிமுகவுடன் பா.ஜ.க சேர்கிறது. இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றது. மம்தா பானர்ஜியை விட ஒரு வலிமையான தலைவர் இந்த இந்திய துணை கண்டத்தில் இல்லை. மம்தா பானர்ஜியின் கட்சியை இரண்டாக உடைத்து சிதைத்து, அங்கு இரண்டாம் கட்ட தலைவராக இருந்த சுவேந்து அதிகாரியை பிரித்து மம்தா பானர்ஜிக்கு எதிராகவே நிற்க வைத்து அவரை தோற்கடித்தனர். அதன் பிறகு அவருடைய கட்சி வெற்றி பெற்ற காரணத்தினால் அவர் முதல்வராகியுள்ளார். அதே போல், தேவகவுடாவின் மகன் குமாரசாமியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்து அவருடைய கட்சியை சிதைத்துவிட்டனர். இதை போல், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்துவிட்டார்கள். இப்படி எந்த கட்சியுடனுன் இவர்கள் சேர்ந்தாலும் அந்த கட்சியை அழிப்பது தான் இவர்களுக்கு நோக்கமாக இருக்கிறது. இப்போது, அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் சண்டை போட வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணம். அதை தான் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பா.ஜ.க ஒரு நெகட்டிவ் ஃபோர்ஸ். அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்தேன். என் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் சொல்லி பார்த்தேன், ஆனால் அதை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. எனவே அடுத்து எனக்கு இருக்கின்ற ஒரே வழி, திமுக தான். எனவே, தான் முதல்வர் தலைமையில் நான் இணைந்திருக்கிறேன். நிச்சயமாக அவர் தான் முதல்வராக வருவார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்து தான் அந்த கட்சிக்கு தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள். 1967இல் நிறைய வலிமைமிக்க தலைவர்கள் இருந்ததால் அந்த அணிக்கு மக்கள் ஆதரித்தார்கள். 1971இல் கலைஞரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்து தேர்தலை சந்தித்த காரணத்தால் மிக பெரிய வெற்றியை மக்கள் தந்தார்கள். அதன் பிறகு ஜெயலலிதா தலைமைக்கு ஓட்டு, இல்லையென்றால் கலைஞருடைய தலைமைக்கு ஓட்டு. எனவே, தலைவர்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையால் இங்கு ஆட்சி நடைபெறுகிறது. இப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர் யார்? யாரும் இல்லை. இவருக்கு இணையான தலைவர்கள் அதிமுகவில் இல்லை.

திராவிட கொள்கைகளை காப்பாற்றுகின்ற, மாநில சுயாட்சியை காப்பாற்றுகின்ற, மொழியை காப்பாற்றுகின்ற, நம் இனத்தை காப்பாற்றுகின்ற, நம்முடைய சமுதாயம் ஆபத்தில் இருக்கும் போது மத்திய அரசிடம் போராடி பாதுகாப்பது மட்டுமல்ல மத்திய அரசு பாரா முகமாக இருந்தால் அதை நீதிமன்றத்துக்கே சென்று தீர்ப்புகளை வாங்கி இந்தியாவுக்கு உதாரணமாக இருக்கக்கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இப்படிபட்ட முதல்வர் தான் மீண்டும் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதிமுகவில் இப்போது எல்லோரும் மன வருத்தத்தோடு தான் இருக்கிறார்கள். கூட்டணிக்கு தலைமை தாங்குவது எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா சொன்னாரே தவிர, முதல்வர் வேட்பாளர் அவர் தான் என ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை. ஜெயலலிதா இருந்த போது பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தோம். அப்போது வாஜ்பாய், அத்வானி இருந்தார்கள். அவர்கள் மற்ற கட்சிகளை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இப்போது மோடி, அமித் ஷா இருக்கிறார்கள். அப்போது பா.ஜ.கவினர், அதிமுகவை பார்த்து பயந்தார்கள். ஆனால், இப்போது அதிமுக அப்படி இல்லை. எனவே, அந்த கூட்டணி என்பது வேறு, இந்த கூட்டணி வேறு. என்னுடைய பேச்சை மட்டுமல்ல, நிர்வாகிகளின் பேச்சை கூட எடப்பாடி பழனிசாமி கேட்கமாட்டார்.  அதிமுகவில் ஒற்றுமை வேண்டும், அதிமுக மீண்டும் உயிர்பெற்று எழ வேண்டுமானால் சில யுக்திகளை கையாள வேண்டும் என்று 7 முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சொன்னார்கள். 3 மணி நேரம் அவருடைய வீட்டில் விவாதம் நடந்தது. கடைசி வரை எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என அதில் கலந்துகொண்ட ஒரு முன்னாள் அமைச்சர் என்னிடம் சொன்னார். அவர் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதிமுக - பா.ஜ.க கூட்டணிய  தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.