அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜா, கடந்த 2022 ஆண்டு சசிகலாவைக் கட்சியில் சேர்க்கக் கோரி பேசியும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தும் இருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக அன்வர் ராஜா செயல்பட்டதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சியின் அடிப்படைஉறுப்பினர் உட்பட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, அன்வர் ராஜா கடந்த 2023இல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இந்த சூழ்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது. இதில் அதிருப்தியில் இருந்த அன்வர் ராஜா, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள், கூட்டணி ஆட்சி  மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தார்.

அதில் அவர் பேசியதாவது, “எந்த காலத்திலும் தமிழக மக்கள், கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டர்கள். தனித்து ஆட்சி என்ற கோஷம் தான் தமிழ்நாட்டில் எடுபடும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை அதிமுக பிடிக்கப் போகிறது என்றால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி தான் என பா.ஜ.க நிர்பந்தித்தால் அதற்கு அதிமுக பணியாது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கூட்டணிக்குத் தலைமை தாங்கப் போவது அதிமுக தான். இதனை பா.ஜ.க ஏற்கவில்லை என்றால் இரு கட்சிகளுக்குமான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் காலூன்று துடிப்பது பாஜகவின் எண்ணமாக இருந்தாலும் அது ஒரு போதும் நடக்காது” என்று பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது அதிமுக - பா.ஜ.க இடையில் சலசலப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், அன்வர் ராஜா திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணைவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். இதனிடையே, அவர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

அன்வர் ராஜா, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2001 முதல் 2006 வரை தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.