புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா ஆரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம்.  இவரது மகன் ஆறுமுகம் (வயது 50). இவர் கடந்த சில மாதங்களாக அன்னவாசல் ஒன்றியம் தச்சம்பட்டி ஊராட்சி செயலராக பணியில் உள்ளார். இங்கு ஊராட்சி மக்களின் எந்த ஒரு பணிக்கும் பொதுமக்களிடம் அதிகமாக லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்திருந்தது. இந்த நிலையில் தான் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மனைவி தாண்டிஸ்வரி (வயது 37) தான் கட்டி வரும் அரசு வீட்டிற்கு ஊராட்சி செயலர் ஆறுமுகத்திடம் ரசீது கேட்ட போது ரூ.250க்கு ரசீது கொடுக்க ரூ.3000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். 

Advertisment

லஞ்சம் கொடுக்க விரும்பாத தாண்டிஸ்வரி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். தாண்டிஸ்வரி கொடுத்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஜவகர் உள்ளிட்ட போலீசார் நேற்று (18.12.2025) தச்சம்பட்டி ஊராட்சி அலுவலகம் சென்று ஆய்வு செய்துள்ளனர். யாரோ யாரையோ தேடி வந்துள்ளனர் என்று ஊராட்சி அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் சினிமா பாடல்கள் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில் தான் இன்று (19.12.2025) காலை தாண்டிஸ்வரி ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று ஊராட்சி செயலர் ஆறுமுகம் கேட்ட ரூ. 3000 பணத்தைக் கொடுத்துள்ளார். 

Advertisment

அப்போது அதே வளாகத்தில் மாற்று உடையில் நின்ற லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் மற்றும்  ஆய்வாளர்கள் பீட்டர், ஜவகர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலிசார் ஊராட்சி செயலர் ஆறுமுகத்தை கையும் களவுமாகப் பிடித்து விசாரணை செய்து கைது செய்துள்ளனர். கிராம ஊராட்சி செயலர்கள் எல்லாம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னைக்குப் போராட்டம் நடத்தச் சென்றுள்ள நிலையில் போராட்டத்திற்குச் செல்லாமல் ஊராட்சி அலுவலகம் சென்ற ஆறுமுகம் லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்டார் என்கின்றனர்.