Anti-Corruption Department catches Surveyor who demanded a bribe
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக, அப்பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதில், நில அளவை பிரிவில் சர்வேயராக சுந்தரவடிவேல் (46) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் நிலம், அந்த விமான நிலைய திட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சித் குமார், விமான நிலையம் அமைப்பதற்கு நிலத்தைக் கையகப்படுத்தும் முன் தனது நிலத்தை அளக்க வேண்டி, நிலம் கையகப்படுத்தும் அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆனால், இந்த வேலையைச் செய்து முடிக்க ரூ.50,000 பணத்தை லஞ்சமாகச் சுந்தர வடிவேல் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் குமார், இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, கடந்த 10ஆம் தேதி இரவு 9 மணியளவில் ரஞ்சித் குமார் சர்வேயர் சுந்தர வடிவேலுவிடம் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில், அங்குப் பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கீதா ஆகியோர் அடங்கிய குழு, சுந்தர வடிவேலுவைச் சம்பவ இடத்திலேயே கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர், அவரை கைது செய்தனர். இது குறித்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow Us