திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநர் அலுவலகம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ளது. தற்போது சரவணபாபு என்பவர் துணை இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் 18-ம் தேதி திடீரென திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது துணை இயக்குநர் சரவணபாபு அறையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில், அவரது அலமாரியில் பைகளுக்கு இடையே 6 கவர்களில் இருந்து 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சரவணபாபுவின் ஓட்டுநரிடம் இருந்து 27,400 ரூபாயையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தீயணைப்புத் துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணபாபு நேர்மையான அதிகாரி என்றும், அவரை யாரோ உள்நோக்கத்துடன் இதில் சிக்கவைத்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, என்.ஜி.ஓ. காலனி தீயணைப்புத் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு அருகில் எதிர்ப்புறம் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில், சோதனை நடைபெற்றதற்கு முந்தைய நாள், அதாவது 17-ம் தேதி திங்கள்கிழமை இரவு 12 மணிக்கு காக்கி பேண்ட், நீல நிறச் சட்டை அணிந்த ஒரு நபர் டூவீலரில் தீயணைப்பு அலுவலகம் முன்பு வருகிறார். அப்போது டூவீலரை நிறுத்திவிட்டு ஒரு பையை எடுக்கிறார். அதிலிருந்து சில கவர்கள் கீழே விழுகின்றன. பின்னர் அந்த நபர் அந்தப் பையுடன் அலுவலகத்திற்குள் சென்று வைத்துவிட்டு பத்து நிமிடங்களில் மீண்டும் வெளியேறுகிறார்.
பார்ப்பதற்கு தீயணைப்புப் படை வீரரைப் போலவே இருக்கும் அந்த நபர் ஏன் நள்ளிரவு 12 மணிக்கு அங்கு செல்ல வேண்டும்? அவர் யார்? அவர் அந்தப் பையில் என்ன கொண்டு சென்றார்? என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
https://www.facebook.com/share/v/16af22xzws/
Follow Us