இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி (20.10.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டது. அதாவது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்காக ஆம்னி பேருந்து கட்டணம் 5000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி தலைமையில் ஆம்னி பேருந்து போக்குவரத்து சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆம்னி பேருந்து கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக சுமுக முடிவு எட்டப்பட்டது. அதன்படி ஆம்னி பேருந்து கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘கண்துடைப்புக்காக ஆம்னி கட்டணத்தைக் குறைத்த திராவிட மாடல்!’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “தீபாவளியை முன்னிட்டு தலைநகரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நான்கு மடங்காக உள்ளதை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பியவுடன், காலங்கடந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது திமுக அரசு. இதனால் யாருக்கு என்ன பயன்.
போதிய அரசுப் பேருந்துகள் இல்லாததால், கூடுதல் தொகை என்று அறிந்தும், வேறு வழியின்றி ஒரு மாதத்திற்கு முன்பே ஆம்னியில் டிக்கெட் புக் செய்திருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்குத் தற்போது இழப்பீடு வழங்க முடியுமா என்ன?. நான்கரை ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், ஒருமுறை கூட முன்னரே திட்டமிட்டுத் தானாக முன்வந்து கட்டணத்தை நெறிபடுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது. காலந்தாழ்ந்து கட்டணத்தைக் குறைப்பது மக்கள் குறையைத் தீர்த்தது போன்ற பாவ்லா காட்டுவதற்கா? அல்லது ஆம்னி பேருந்துகளிடம் கமிஷன் பெற்று கல்லா கட்டுவதற்காகவா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுகிறது. எது உண்மையென்று பதில் சொல்லுங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.