அண்மையில், திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற பெண், வரதட்சணைக் கொடுமை காரணமாக திருமணமான 70 நாட்களில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்த வழக்கில், ரிதன்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தின் வடு சற்றும் குறையாத நிலையில், தற்போது அதே திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

திருப்பூர், பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவரது மகள் பிரீத்தி, ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது, பிரீத்தியின் குடும்பத்தினர் 120 பவுன் நகைகள், 25 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 38 லட்சம் மதிப்பிலான இன்னோவா கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக வழங்கியிருந்தனர்.

இருப்பினும், பிரீத்தியின் பூர்வீகச் சொத்து விற்பனை மூலம் 50 லட்சம் ரூபாய் கிடைக்கவிருப்பதை அறிந்த சதீஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்தப் பணத்தைக் கேட்டு பிரீத்தியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, திருமணமாகி 10 மாதங்களில் பிரீத்தி, கணவரின் வீட்டைவிட்டு வெளியேறி, தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை, தனது தாயார் சுகந்தி வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நல்லூர் காவல்துறையினர், பிரீத்தியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். 

Advertisment

இதனிடையே, சதீஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, பிரீத்தியின் உறவினர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பிரீத்தியின் உடலை வாங்க மாட்டோம் என்று கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

திருப்பூரில்  வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் மீண்டும் உயிரிழந்திருக்கும் சம்பவம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.