கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 25 வயது பெண் கடந்த ஆறு மாதங்களாக கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, டேட்டிங் ஆப் மூலம் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த 28 வயதான தருண் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
ஆன்லைன் செயலி மூலம் இளம் பெண்ணிடம் பேசிய தருண், நேரில் பார்த்துப் பேசலாம் என்று அழைத்து, கடந்த 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தனது சொகுசுக் காரை எடுத்துக்கொண்டு பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் விடுதிக்குச் சென்று, இளம் பெண்ணை விடுதியிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். கோவையை அடுத்த கே.கே. சாவடி தனியார் கல்லூரி அருகே காரை நிறுத்திய தருண், அங்கு மற்றொரு நபரை வரவழைத்ததுடன், இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகைகளையும், UPI மூலம் அவரது கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துள்ளனர்.
அதையடுத்து, இளம்பெண்ணை மீண்டும் கோவை அழைத்து வந்த இருவரும் கோவை-திருச்சி சாலையில் இறக்கிவிட்டுள்ளனர். ஆனால், இரவு நேரத்தில் ஹாஸ்டலில் அனுமதிக்க மாட்டார்கள் என்று அந்தப் பெண் தருணிடம் கூறியுள்ளார். அதன்பின்னர், இளம்பெண்ணின் மொபைல் போனை வாங்கிய தருண் நட்சத்திர ஹோட்டல் ரூம் ஒன்றைப் பதிவு செய்துகொடுத்து அனுப்பியுள்ளார்.
அன்று இரவு அந்த நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அந்தப் பெண், தனக்கு நடந்தவற்றைத் தனது வீட்டாருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 3-ம் தேதி காலை இளம்பெண்ணின் சகோதரி மற்றும் அவரது உறவினர்கள் பந்தயசாலை காவல்நிலையத்தில் தருண் மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணையின்போது தருண் திண்டுக்கல் டி.எஸ்.பி. தங்கப்பாண்டியனின் மகன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 10-ம் தேதி தருணைக் கைது செய்தனர். அதன்பின்னர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தருண் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2-ம் தேதி இரவு கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அன்றைய தினம்தான் இந்தச் சம்பவமும் அரங்கேறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/11/4-2025-11-11-17-26-08.jpg)