புதுக்கோட்டை மாவட்டத்தில் நகை, பணம், பைக், மோட்டார் கேபிள்கள் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருட்டு சம்பவங்கள் சிசிடிவியில் பதிவாகி இருந்தாலும் கூட திருடர்களை பிடிப்பது குறைந்து வருவதால் திருட்டுகள் குறையவில்லை. இதே போல, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் பல நூறு பைக்குகளை திருடி பல முறை சிறைக்கு சென்று திரும்பினாலும் வெளியே வந்ததும் மீண்டும் திருடும் கொத்தமங்கலம் ஒத்தைச்சாவி கண்ணன் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் சரகத்தில் ஒரு வாரத்தில் 4 பைக்குகள் திருடிய நிலையில் ஆலங்குடி தனிப்படை போலிசார் கொத்தாக தூக்கி வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

Advertisment

4 பைக்குகள் மீட்கப்பட்டு ஒத்தைச்சாவி கண்ணனை மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்து இனி பைக் திருட்டு குறையும் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் வடகாடு போலிசார். ஆனால், இதே வடகாடு காவல் சரகத்தில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் நிறுத்தி இருந்த பைக்கை நேற்று (22.08.2025 - வெள்ளிக்கிழமை) இரவு ஒரு இளைஞன் திருடிச் செல்லும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, டாஸ்மாக் கடை வளாகத்தில் நிறைய பைக்குகள் நிறுத்தி இருந்த நிலையில்  கருப்பு டி சர்ட் போட்ட இளைஞர் ஒருவர் உள்ளே வந்து ஒரு பைக் அருகே நின்று சில நிமிடங்கள் போனில் பேசுவது போல போனை காதில் வைத்துக் கொண்டே அங்குமிங்கும் பார்த்துவிட்டு நுழைவாயில் அருகே நின்ற ஒரு பைக்கை எடுத்து ஓட்டிச் செல்கிறார்.

டாஸ்மாக் கடைக்குள் சென்று வெளியே வந்த ஒருவர் தனது பைக்கை காணாமல் போனது குறித்து தேடியும் கிடைக்காத நிலையில் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போது யாரோ மர்ம நபர் தனது பைக்கை திருடிச் செல்வது தெரிய வந்தது. அந்த இளைஞனை பைக்கில் ஏற்றி வந்து அங்கே வி்ட நபர் டாஸ்மாக் கடை வரை சென்று பைக் உரிமையாளர் வர தாமதம் ஆகும் என்பதை உறுதி செய்த பிறகு பைக்கை திருடிச் சென்றதாக தெரிகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்தும் தனிப்படை போலிசாரும், வடகாடு போலிசாரும் பைக் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஏற்கனவே பைக் திருட்டு சம்பவங்களில் உள்ளவர்கள் பற்றியும் விசாரனை செய்து வருகின்றனர்.