வங்கதேச நாட்டின் கோனேஷ்வர் ஒன்றியத்தில் உள்ள திலோய் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான கோகோன் சந்திர தாஸ். அவர் கேயுர்பங்கா சந்தையில் ஒரு மருந்தகத்தையும், மொபைல் வங்கித் தொழிலையும் நடத்தி வந்தார். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு, தனது கடையை மூடிய பிறகு, அவர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ​​சந்தைக்கு அருகிலுள்ள தமுத்யா-ஷரியத்பூர் சாலையில் ஒரு கும்பல் அவர் சென்ற வாகனத்தை நிறுத்தி அவரைத் தாக்கியுள்ளனர். மேலும், அந்த மர்ம நபர்கள் அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய பிறகு தீ வைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில், தாஸ் சாலையோரத்தில் இருந்த ஒரு குளத்தில் குதித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது தாஸின் அலறல் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு ஷரியத்பூர் சதர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டது. மூன்று நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்த தாஸ் தற்போது மரணமடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாஸின் மனைவி சீமாதாஸ் கூறுகையில், ‘என் கணவர் ஒவ்வொரு இரவும் கடையை மூடிவிட்டு, அன்றைய விற்பனைப் பணத்துடன் வீடு திரும்புவார். சம்பவம் நடந்த தினத்தன்று இரவு, மர்ம கும்பல் அவரைத் தாக்கியுள்ளனர். அவரை வெட்டியதுடன், பெட்ரோல் ஊற்றி அவரது தலை மற்றும் முகத்தில் தீ வைத்துள்ளனர். எங்களுக்கு இந்தப் பகுதியில் எந்த எதிரிகளும் இல்லை. எந்த விஷயத்திலும் யாருடனும் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. குற்றவாளிகள் ஏன் திடீரென்று என் கணவரைக் தாக்கினார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை’ எனக் கூறினார்.
வங்கதேசத்தில் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து நடைபெறும் இந்த தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவமும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பாக தீபு சந்திர தாஸ் என்பவரை, கடந்த டிசம்பர் 18 அன்று மத துவேசத்தை காரணமாகக் காட்டி கொன்று தீ வைத்து எரித்தது ஒரு கும்பல். அடுத்ததாக ராஜ்பாரி மாவட்டத்தின் பாங்ஷா துணை மாவட்டத்தில் உள்ள காலிமோஹர் ஒன்றியத்தின் ஹோசென்டங்கா கிராமத்தில், அம்ரித் மொண்டல் என்ற ஒரு இந்து இளைஞர், மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்டார். இந்த தொடர் சம்பவங்கள் பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் அரசியல் தலைவர்கள், மத அமைப்புகள் மற்றும் சிறுபான்மைக் மக்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/ban-2026-01-04-08-29-54.jpg)