மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் தனது பணிக்கு உயர் அதிகாரிகள் இடையூறு செய்வதுடன் எனக்கான வாகனத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டதாக அலுவலகத்திற்கு நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவருக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியிருந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளும் இதை பேசுபொருளாக்கினர். இதனால் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பேசும் போலீசார் மீதும் துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் திருச்சி 'மாவட்ட குற்றப்பிரிவு 2' துணை காவல் கண்காணிப்பாளர் வை.பரத் ஸ்ரீனிவாஸ் இன்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலகத்திற்கு தனக்கு விருப்ப ஓய்வு வழங்க கோரி விண்ணப்பம் அனுப்பி உள்ளார்.

அந்த விண்ணப்பத்தில், நான் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1997 ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு 2-ல் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் நான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன். நான் விருப்ப ஓய்வில் செல்ல எனக்கு அனுமதி வழங்குமாறு அய்யா அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் பணியாற்றிய இடங்களில் பொதுமக்கள் காவலர்களுக்கிடையே நல்லுறவுடன் நடந்து கொண்டதால் இவர் பணியில் இருந்த பகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் இவருடன் இன்றளவும் நட்பில் உள்ளனர். மார்த்தாண்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது ஒரு பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்ததால் உயர் அதிகாரிகள் இவர் மீது கோபமடைந்தனர். புகார் கொடுத்தார்கள் வழக்கு பதிவு செய்தேன் என்று பதில் சொன்னதால் நேர்மையாக இருந்தால் காவல் பணி செய்ய முடியாது என உயர் அதிகாரிகள் கூறியதுடன் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்திற்கு மாற்றி அனுப்பினர்.

Advertisment

a4537
Another DSP writes letter requesting voluntary retirement Photograph: (dsp)

Advertisment

அவர் வடகாடு வந்த நேரத்தில் ஆழ்குழாய் கிணற்றில் மணப்பாறையில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளை மூடச் சொன்ன போது கிராமம் கிராமமாகச் சென்று பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளை மூடினார். அடுத்து கொரோனா  காலக்கட்டத்தில் உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் களப்பணியில் சிறப்பாக செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் பரத்ஸ் ரீனிவாஸை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்தனர். அதன் வெளிப்பாடாக அவர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று டெல்டா மாவட்ட நார்கோட்டில் பணிக்கு போனாலும் 2022 ல் மாங்காடு கிராம இளைஞர்கள் தங்கள் கிராம முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

பணியில் நேர்மையாக செயல்பட்ட இவருக்கு காவலர்கள், வாகனம் இல்லாத இடங்களில் பணி வழங்கப்பட்டதால் கடும் மன உளைச்சலில் கொடுத்த பணியை செய்து வந்தவர் தற்போது திருச்சி குற்றப்பிரிவு 2 ல் பணியில் உள்ளார். பல வருடங்களாக தனது பணியை செவ்வனே செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சல் இன்னும் 4 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் போதே விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளார் என்கின்றனர் விபரம் அறிந்த போலீசார்.