சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200-க்கும் மேற்பட்டவர்கள் கடைநிலை தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணியில் சேரும்போது ஒரு நாளைக்கு ரூ.40 கூலிக்கு பணியாற்றி வந்துள்ளனர். 20 ஆண்டுகள் கழித்து கடந்த ஒரு ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ரூ 400 வீதம் தற்போது தின கூலி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய அனைத்து பயன்களையும் வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் தினக்கூலி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனை அறிந்த அனைத்து தினக்கூலித்தொழிலாளர்களும் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை செவ்வாய்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பல்கலைக்கழக நிர்வாகிகள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது தினக்கூலித் தொழிலாளர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் தொழிலாளர்களை பணிக்கு செல்லலாம் என கூறியது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ், ஜி ரமேஷ்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் தினக்கூலித் தொழிலாளர்களாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தன் வாழ்க்கையே பல்கலைக்கழகத்திற்கு அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்வது தான் சரியான முடிவாக இருக்கும். இந்த நிலையில் அவர்களை பணி நீக்கம் என்பது அவர்கள் வாழ்வாதாரம் முழுவதும் பாதிப்படையும் எனவே ஒரு வார கால அவகாசத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரை சந்தித்து முறையிடுவது, இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.