Annamalai University teachers' strike temporarily postponed
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற உள்ளதாக அமைச்சர்கள் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் 7-வது ஊதியக்குழு நிலுவை தொகைகளை வழங்க வேண்டும், அயர் பணியிட ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிலேயே உள்ளெடுப்பு செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பண பயன்களை உடனே வழங்க வேண்டும், பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே பூர்த்தி செய்ய வேண்டும், துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந்தேதி முதல் இரவு பகல் என தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சியின் தலைவர்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டும், போராட்டகளத்திற்கு வந்து பேசினர்.
இந்நிலையில் நவம்பர் 15-ம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் ஆகியோரை பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடைய நம்பி, பதிவாளர் சிங்காரவேலு சந்தித்து பேசியபோது, அமைச்சர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து நிறைவேற்ற இருப்பதாகவும் ஆகவே போராட்டத்தை கைவிட வலியுறுத்தி கேட்டுக்கொண்டதாக கூறினர். இதனை எழுத்து பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.
இதனை ஏற்று ஆசிரியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.
Follow Us