சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
கூட்டமைப்பின் நிர்வாகிகள் முத்துவேலாயுதம், துரை அசோகன், செல்வராஜ், தனசேகரன், செல்லபாலு, ஜான் கிருஷ்டி, காயத்ரி, திருஞானம், பரணி, சிங்கார சுப்ரமணியன் உள்ளிட்டோர் உட்பட 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகை, முனைவர் பட்ட ஊக்கத்தொகை உடனே வழங்க வேண்டும், அயர் பணியிட ஆசிரியர்களைப் பல்கலைக்கழகத்திற்கு உடனே உள்ளெடுப்பு செய்ய வேண்டும், பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத் துறைகளைப் போலவே அனைத்துப் பணப் பயன்களையும் ஓய்வு பெற்ற உடனேயே வழங்கிட வேண்டும், ஆட்சிக் குழு மற்றும் கல்விக் குழுக்களில் ஆசிரியர் சங்கங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், அனைத்து நிர்வாகப் பொறுப்பு காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 3 ஆண்டுகள் பதவிக் காலம் முடிந்த அனைவரும் நீக்கப்பட்டு புதியவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி வரும் 10-ஆம் தேதி காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம், தேர்வுப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
Follow Us