சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க சங்கம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால், 2018 ஆம் ஆண்டு முதல் ஊழியர் சங்கத் தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், குரல் வாக்கெடுப்பு மூலம் ஊழியர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலராகப் பேராசிரியர் சுதாகர் மற்றும் உதவித் தேர்தல் அலுவலராக சந்திரா ஆகியோர் முன்னிலையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.
சங்கத்தின் புதிய தலைவராக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பிரிவு அலுவலர் ஆ. ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக சு. தேவேந்திரன், துணைப் பொதுச் செயலாளராக எஸ். சியாம்சுந்தர், பொருளாளராக தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பல்கலைக்கழக ஊழியர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2,077 ஊழியர்களில் 1,461 பேர் இந்தத் தேர்தலில் பங்கேற்று புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.