அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பல்கலைக்கழகத்தைக் கையகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கலால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணி நியமனங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக உள்ளது என்று பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களைத் தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பணி நிறுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை, முனைவர் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும்; அயற்பணியிட ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் கல்வி நிறுவனங்களிலேயே உடனடியாக உள்ளெடுப்பு செய்ய வேண்டும்; பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அயற்பணியிட ஆசிரியர்களைக் கொண்டு யுஜிசி/தமிழக அரசின் விதிமுறைகளின்படி வாரத்திற்கு ஒருவருக்கு வேலைப்பளு 16/14 மணிநேரம் என்ற விகிதத்தில் கணக்கிட்டுத் திரும்ப அழைக்க வேண்டும்; ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத்துறைகளைப் போலவே அனைத்துப் பணப் பயன்களையும் ஓய்வு பெற்ற உடனேயே வழங்க வேண்டும்; ஆட்சிக்குழு மற்றும் கல்விக் குழுக்களில் ஆசிரியர் சங்கங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்; அனைத்து நிர்வாகப் பொறுப்பு காலியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்; 3 ஆண்டுகள் பதவிக் காலம் முடிந்த அனைவரும் நீக்கப்பட்டுப் புதியவர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களைப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தினர்.
இதற்கு அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சரியான தீர்வு எட்டப்படாத நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் தேர்வைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இரவிலும் இவர்கள் போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 11-ம் தேதி 2-வது நாளாக ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து இரவு பகல் பாராமல் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
Follow Us