ஒவ்வொரு சர்வதேச மாநாட்டிலும், உலகின் தலைசிறந்த வெல்டிங் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரைத் தேர்வு செய்து, அவருக்கு ‘ஹலில் கயாகெடிக்’ என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்நிலையில், 78-வது சர்வதேச மாநாட்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உலோகங்கள் இணைப்பு (வெல்டிங்) ஆராய்ச்சி மைய இயக்குநர் வி. பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு, உலக அளவில் தலைசிறந்த வெல்டிங் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டு, ‘ஹலில் கயாகெடிக்’ விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை பல்கலைக்கழக சுரங்கவியல் துறையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சுரங்கவியல் துறை இயக்குநர் சி.ஜி. சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் இயக்குநர் சுரேஷ் சந்திரசுமன் கலந்து கொண்டு, விருது பெற்ற பேராசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில், உலோகங்கள் இணைப்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் உலக அறிவியலில் தாய்நாட்டின் வளர்ச்சி குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
மேலும், இந்தியா சார்பில் முதல் முறையாக இந்த விருதை அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பெற்றது மகிழ்ச்சிக்குரியது எனக் குறிப்பிட்டார். என்எல்சி நிறுவனத்திற்கு வெல்டிங் தொழில்நுட்பம் மிக முக்கியமானது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து, பேராசிரியர் மலர்விழி, சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பேராசிரியர் செல்வமணி, இணைப் பேராசிரியர் சிவராஜ் ஆகியோர், விருது பெற்ற பேராசிரியர் பாலசுப்பிரமணியனின் பணிகள் மற்றும் இந்த விருதால் பல்கலைக்கழகம் பெற்ற உலகளாவிய பெருமை குறித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் சுரங்கவியல் மற்றும் உலோகவியல் துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.