கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் மற்றும் ஓய்வு ஊதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 20 நாட்களுக்கு மேலாகப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள், பணப்பயன்கள், ஓய்வு ஊதிய தொகை, தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இவர்களின் போராட்டத்திற்குத் தமிழக அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை திங்கட்கிழமை 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
Follow Us