2022 -23 மற்றும் 2023 - 24  ஆகிய  இரு கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியாற்றுவது போன்று போலியாகக் கணக்குக் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் 224 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடிய மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தினர் என மொத்தம் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

அதாவது கல்லூரியில் உட்கட்டமைப்பு, பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மையத்தின் இயக்குநர்கள், துணை இயக்குநர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த முறைகேடு சம்பவம் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. 

Advertisment

இந்நிலையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 163 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் சார்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை வழங்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்த வழக்கில், ‘தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் பணிபுரிந்தது போன்று போலியான ஆவணத்தைச் சமர்ப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.