2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டது. அதாவது தமிழகத்தில் உள்ள 480 கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடிய மையத்தின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தினர் என மொத்தம் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் வழங்கும் மையத்தின் முன்னாள் இயக்குநரும், நாகாலாந்து நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஷிப் டெக்னாலஜியின் தற்போதைய இயக்குநருமான இளையபெருமாள், அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குநர்களான சித்ரா, ஷீலோ எலிசபெத் உள்ளிட்ட 17 பேர் மீது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் பணிபுரிந்தது போன்று போலியான ஆவணத்தை சமர்ப்பித்துதான் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியில் உட்கட்டமைப்பு, பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை எல்லாம் ஆய்வு செய்து தான் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரத்தை இந்த மையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மையத்தின் இயக்குநர்கள், துணை இயக்குநர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இது போன்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக, வழக்குப்பதிவு செய்யப்பட்ட 17 பேருக்கும் சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு சம்பவம் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us