ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பவன் கல்யாண் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் வருகின்ற மகளிர் தினத்தன்று, பெண்களுக்கென்று 3 புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறார். அதன்படி, என்.டி.ஆர். வித்யாலட்சுமி, என்.டி.ஆர். கல்யாணலட்சுமி மற்றும் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் ஆகிய மூன்று அதிரடி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

என்.டி.ஆர். வித்யாலட்சுமி திட்டம் பள்ளி குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது. இதன்படி, குறைந்தது ஆறு மாதத்திற்கும் மேலாக துவாக்ரா சங்கங்களில் உள்ள பெண்கள் இந்த திட்டத்தில் பயனடையத் தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தில், அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்குக் கல்வி சம்பந்தமான செலவினங்களுக்காக ரூ.10000 முதல் ரூ.100000 வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை, சுலப தவணையாக 48 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.  

Advertisment

இரண்டாவதாக, என்.டி.ஆர். கல்யாண லட்சுமி திட்டத்தின் மூலம், மகளின் திருமண செலவுகளுக்கு ரூ.10,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கடன் பெறலாம். மிகக் குறைந்த வட்டியில் கிடைக்கும் இந்த கடனை 48 மாதங்களுக்கு மேல் சுலப தவணையில் கட்டலாம். இந்த பணம், திருமணம் நடைபெறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.  மூன்றாவதாக, துவாக்ரா சங்கங்களின் மேலாண்மை திட்டத்தின் மூலம், பதிவுகள் மற்றும் கணக்கியலை எளிதாக்கும் வகையில் 27,500 அனிமேட்டர்கள் மற்றும் 5,000 சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும். மேலும், 600 ஏபிஎம்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டங்களை அறிவித்து உடனடியாக அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பப்படுகிறது.