ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அமைந்துள்ளது கோணவாய்க்கால் கிராமம். இங்குள்ள சேலம் – கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ்.. வெளிமாநிலத்தை சேர்ந்த மக்கள் சிலர் வசித்து வருகின்றனர். அவர்களில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் – கீர்த்தனா தம்பதியும் இருக்கின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கின்றன.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு வெங்கடேஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொசு வலை விரித்து தூங்கிக்கொண்டிருந்தார். அடுத்தநாள் அதிகாலை அனைவரும் கண்விழித்து பார்த்தபோது.. தங்களுடைய ஒன்றரை பெண் குழந்தை மட்டும் காணாமல் போய் இருந்துள்ளது. இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் மற்றும் உறவினர்கள்.. தங்களுடைய குழந்தை எங்கே என பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதே நேரம், இரவில் தூங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கொசுவலை.. காலையில் எழுந்து பார்க்கும்போது கிழிக்கப்பட்டு இருந்துள்ளது. எனவே மர்ம நபர்கள் யாரோ கொசு வலையை கிழித்து அதன் வழியாக பெண் குழந்தையை மட்டும் தூக்கி சென்றது தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்.. குழந்தை கடத்தப்பட்டது குறித்து சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இந்த வழக்கில் தீவிரம் காட்டும் போலீசார்.. குழந்தையை மீட்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, சம்பவம் நடந்த இடம் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதி என்பதால்.. அங்கு சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. எனவே சற்று தொலைவில் ஏதேனும் சிசிடிவிக்கள் இருக்கிறதா? எந்தெந்த வாகனங்கள் அந்த வழியாக சென்றன? போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, அது நெடுஞ்சாலை பகுதி என்பதால்.. அங்கு ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கின்றன. ஏதேனும் ஒரு வாகனத்தை நிறுத்தி இரவு நேரத்தில் பெண் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்.. நள்ளிரவில் அந்தப் பகுதி வழியாக வந்த 3 மர்ம நபர்கள்.. பெண் குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மூன்று நபர்கள் யார், அவர்கள் ஏதாவது சிசிடிவி காட்சியில் சிக்குகிறார்களா என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை.. மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம்.. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.