வேலூர் மாவட்டம், அண்பூண்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று (04.08.2025) பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, பூமியில் இருந்து பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், வருவாய்த் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள், கண்டெடுக்கப்பட்டவை ஐம்பொன்னால் ஆன பாலசுப்பிரமணியர், விநாயகர், சிவகாமியம்மை, மற்றும் சந்திரசேகரர் எனப்படும் பிரதோஷ மூர்த்தி சிலைகளாக இருக்கலாம் என்றும், இவை சோழர் காலத்து சிலைகளாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், இந்தச் சிலைகள் காட்பாடியில் உள்ள உலோக சிலை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், அவை எங்கு வைக்கப்பட வேண்டும் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.