தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அன்புமணி தரப்பு பா.ம.க சார்பில் இளைஞரணி பொதுக்கூட்டம் இன்று (10-02-26) சென்னையில் நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், திமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து திமுகவை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, “இளைஞர்களை நம்பித்தான் நம் கட்சி இருக்கிறது. நீங்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். நம் கட்சிக்குள் நடக்கிற குழப்பங்களுக்கு யார் காரணம் என்று உங்களுக்குத் தெரியும். இதற்கெல்லாம் ஒரே காரணம் யார் என்றால் திமுக தான். ஆளுகின்ற திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறக்கூடாது. ஸ்டாலின் அவர்களே அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் துரோகம் செய்திருக்கிறீர்கள். செவிலியர்கள், மருத்துவர்கள், இடைநிலை ஆசிரியர்கள், துணை பேராசிரியர்கள் என ஒவ்வொரு பக்கமும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அத்தனை போராட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். அனைத்து தரப்பு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றிய மு.க.ஸ்டாலினை மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள். கடந்த 45 நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 26 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். இதுதான் பெரிய ஜோக்.

Advertisment

உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். கனவை சொல்லிடமா? அந்த வெப்சைட்டுக்குள் நம் இளைஞர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் அதில் சென்று உங்களுக்கு என்னென்ன மனதில் தோன்றுகிறதோ அதை பதிவு செய்திடுங்கள். கெட்ட வார்த்தையை தவிர இங்கு நடக்கிற சம்பவங்கள் எல்லா விஷயங்களையும் பதிவு செய்யுங்கள். இப்போது அவர்கள் பாட்டாளி குடும்பத்தை சீண்டிட்டாங்க. அதனால் தேர்தலில் நீங்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும். ராமதாஸை சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள். அவரிடம் தப்பு தப்பாக பொய் பொய்யாக சொல்லி சொல்லியே அவருடைய மனசை மாற்றி பொய்யான தகவலை சொல்லிருக்கிறார்கள். நேற்று கூட சின்னம் நமக்கு தான் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அதையும் அவரிடம் பொய்யாக சொல்லி நாம் தான் வெற்றி பெற்றோம், நமக்கு தான் சின்னம் கிடைத்திருக்கிறது என்று சொல்லிருக்கிறார்கள். அந்த துரோகிகள் முக்கியமான துரோகி ஜி.கே.மணி தான். அதைப் பற்றி நிறைய விஷயங்கள் இருக்கிறது, அதை அப்புறம் சொல்கிறேன். நான் சொல்கிற அளவுக்கு அவருக்கு தகுதி கிடையாது” என்று பேசினார்.