பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று (05-10-25) திடீரெனெ அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு வரும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியானது. மேலும், அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராமதாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு இன்று காலை வருகை தந்தார். அதன் பின்னர், மருத்துவர்களை சந்தித்து ராமதாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராமதாஸ் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ராமதாஸ் நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அதன் பின்னர், அவரின் இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்கள் நன்றாக இருக்கிறது. அதனால் பயப்படுவதற்கு எதுவும், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர் ஐ.சி.யூவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.