'Anbumani's gang is taking up bad politics' - Ramadoss condemns Photograph: (pmk)
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இதற்கிடையில் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான பா.ம.க எம்எல்ஏ அருள், அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறார்.
இன்று சேலம் வாழப்பாடி அருகே பா.ம.க அருள் சென்ற காரை நடுவழியில் மறித்து சிலர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ம.க எம்.எல்.ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் சேலம் மாவட்ட, பெத்தநாயக்கம் பாளையத்திற்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வை முடித்து விட்டு வாழப்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது 50க்கும் மேற்பட்ட கும்பல், அருளின் காரை மறித்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம் என பகிரங்கமாக எம்.எல்.ஏ அருள் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இரா.அருள் அவர்கள் இன்று காலை சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் (கி) பா.ம.க ஒன்றிய செயலாளர் சத்தியராஜின் தந்தை இறப்பு செய்தியை அறிந்து வடுகதத்தம் பட்டி கிராமத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் வழியில், ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லையான மத்தூர் தரைப்பாலத்தில், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெ.பி என்கிற ஜெயப்பிரகாஷ் தலைமையில் அன்புமணி ஆதரவு சட்ட விரோத கும்பல் ஒன்று கத்தி, இரும்பு பைப்புகள், கட்டைகள் போன்ற ஆயுதங்களுடன் சட்ட மன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவருடன் வந்த கட்சியினரின் 5 கார்களை வழிமறித்து, "மருத்துவர் அன்புமணி வாழ்க" என்று கோஷம் எழுப்பி கொண்டு "அய்யாவுடன் சேர்ந்து கொண்டு அன்புமணி அண்ணனுக்கு எதிராகவே அரசியல் செய்கிறீர்களாடா.." என்றும் முழங்கியவரே கார் கண்ணாடிகளை அடித்து, உடைத்து, நொறுக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளை குறி வைத்து கொலை செய்ய வேண்டும் என ஜெயப்பிரகாஷ் ஒரு கல்லை தூக்கி வந்து "அன்புமணி அண்ணன் தான் உன்னை அடித்து கொலை செய்ய சொன்னார்" என்றும், " இனிமேல் அன்புமணி அண்ணனை எதிர்ப்பவர்களுக்கும், அய்யாவுடன் இருக்கும் ஆட்களுக்கும் இதே கதிதான் என கூறி உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்" என்றும், கூறிக்கொண்டே கொலை செய்யும் நோக்கத்துடன் சட்ட மன்ற உறுப்பினர் அருள் தலையில் அடிக்க முற்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை காவல்துறையை சேர்ந்தவர்கள் நேரில் பார்த்து உள்ளனர். கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளாமல், ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த இந்த தாக்குதல் நிகழ்வு கடுமையான கண்டனத்துக்குரியது.
கடந்த சில நாட்களாக சேலம், அரியலூர், தர்மபுரி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் அன்புமணி அவர்கள் பலரை தூண்டிவிட்டு என்னையும், என்னுடன் இருக்கும் முக்கிய பொறுப்பாளர்களையும் அவமானப்படுத்தும் வகையிலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வன்முறையை தூண்டி விட்டு மோதல் போக்கை உருவாக்கி வருகிறார்.
வன்முறையை தூண்டுபவர்களை அன்புமணி அவர்கள் உற்சாகப்படுத்தி, பாராட்டி பொறுப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் அன்புமணியின் தூண்டுதலின் பேரில் பல மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மோதல்கள் நடந்து வருகிறது. அதில் சிலர் கடுமையாக தாக்கப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மீதான தாக்குதலுக்கும், கலவரத்திற்கும் காரணம் அன்புமணியின் நடைபயணம் தான்.
அன்புமணி நடைபயணம் என்ற பெயரில் என்னை அவமானப்படுத்தி, என்னுடன் உள்ள பா.ம.க.வினரை அழித்து ஒழிக்க வேண்டும் என திட்டமிட்டு அமைதியாக உள்ள தமிழகத்தில் வன்முறையை தூண்டி வருகிறார். எனவே தான் இந்த நடை பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே, 'நடைபயணம் என்ற பெயரில் கலவரங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர், மோதல் சம்பவங்கள் நடைபெறும்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில் காவல்துறைக்கு உரிய தகவல் கொடுத்தோம். அதை ஏற்காமல் காவல்துறை நடைபயணத்திற்கு அனுமதி வழங்கியதே இந்த மோதல் சம்பவங்களுக்கு காரணம். அமைதிப் பூங்காவான தமிழகத்தை கலவரமாக்கும் நோக்கத்தில் செயல்படும் அன்புமணியின் நடைப்பயணத்திற்கு இனியும் அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும். காவல்துறை இவற்றை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அன்புமணியுடன் இருக்கும் கும்பலின் நடவடிக்கைகளால் தொண்டர்களும், மக்களும் அவர்கள் மீது நம்பிக்கையற்று, அவருக்கு எதிராக, உண்மையான பாட்டாளிகளாக அணி திரண்டு என்னிடம் வருகிறார்கள்.
என்னுடன் இருக்கும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்களை தம்பக்கம் இழுக்க பல்வேறு வலைகளை வீசியும், ஆசை வார்த்தைகள் கூறியும் இயலாமல் போன விரக்தியின் வெளிப்பாடாக தற்போது கட்சி நிர்வாகிகள் மீது ரவுடிகளை வைத்து தாக்குதல்களை கட்ட விழ்த்து விட்டுள்ளார். "டீசன்ட் அன்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ்" என்று, நாகரிக அரசியல் செய்வதாக மேடைக்கு மேடை போலியான வார்த்தைகளால் முழங்கி வரும் அன்புமணி தற்போது அநாகரிகமான அரசியலையும், வன்முறை அரசியலையும் கையில் எடுத்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினரான அருள் மீதான இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர்களாக செயல்பட்ட அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் சுதந்திரமாக மக்கள் பணி செய்வதற்கும் ஏதுவாக அவருக்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய குழு காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.
அத்துடன், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இம்மாதிரியான, மோசமான சம்பவங்கள் நடத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் அன்புமணியே திட்டமிட்டு, தூண்டுதலை செய்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். இவ்வாறு திட்டமிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதமாக, என்னுடன் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரை தாக்க வேண்டும் என்று சதி திட்டத்தோடு செயல்படும் அன்புமணியின் கும்பலை தடை செய்து, அந்த சட்ட விரோத கும்பலில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Follow Us