'சமூகநீதி வாயிலாக சமத்துவத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுங்கள். அதைவிடுத்து சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக நாடகங்களை நடத்த  வேண்டாம்!' என பாமகவின் அன்புமணி திமுக அரசை விமர்சித்துள்ளார்.
Advertisment
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சாதிகளை ஒழிப்பதற்கு சிறந்த வழி என்ன? என்று ஆசிரியர் எழுப்பிய வினாவுக்கு பதிலளித்த முட்டாள் மாணவன்,‘‘அனைவரின் சாதி சான்றிதழ்களையும் வாங்கி கிழித்து எறிந்து விடலாம். அவ்வாறு செய்தால் யாரிடமும் சாதிக்கு சான்று இருக்காது. அதனால் சாதி ஒழிந்து விடும்” என்று கூறியிருந்தானாம்.  தமிழ்நாட்டின் தெருக்களில் சாதிகளை ஒழிக்கப் போவதாக திமுக அரசு ஆணை வெளியிட்டிருப்பதும் அப்படிப்பட்டதாகத் தான் தோன்றுகிறது.
Advertisment
சாதிகள் ஒழிக்கப்பட வேண்டியவையே. ஆனால், சட்டத்தைப் போட்டு சாதியை ஒழிக்க முடியாது; அரசாணைகளை வெளியிட்டு அவற்றை சாதிக்க முடியாது. மாறாக,  அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும்.  எனவே, சாதியை ஒழிப்பதற்கான சிறந்த வழி சமத்துவத்தை நோக்கி சமூகநீதிப் பாதையில் பயணிப்பது தான்.  ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு,  சீனி, சக்கரை என்று காகிதத்தில் எழுதி நாக்கில் ஒட்டிக் கொண்டு இனிப்பதைப் போன்று நடிப்பதைப் போலவே, கிராம சபைக் கூட்டங்களில், தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவதற்கான தீர்மானங்களை இயற்றுவதன் மூலம் சாதிகளை ஒழிக்கப் போவதாக  மாயையில் உழன்று கொண்டிருக்கிறது.
சமூக ஏற்றத்தாழ்வுகள் தான் சாதியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்து  58 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்காக ஆக்கப்பூர்வமாக எதை செய்திருக்கிறது? சாதியை ஒழிக்கும் நோக்குடன் தான் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலையை உயர்த்தலாம்; அதன் மூலம் என்றாவது ஒருநாள் சாதி ஒழியும் என்பது தான் சமூகநீதியாளர்களின் நோக்கம். ஆனால், அந்த நோக்கத்தை நிறைவேற்ற திமுக என்ன செய்திருக்கிறது?
Advertisment
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் பயன்கள் இன்னும் முழுமையாக அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும், பட்டியலினமாக இருந்தாலும் அந்த வகுப்புகளுக்குள் இட ஒதுக்கீட்டின் பயன்களை முழுமையாக அனுபவிக்காத  சமுதாயங்கள் ஏராளமாக உள்ளன. அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்களை கிடைக்கச் செய்வதற்கான ஒரே தீர்வு உள் இடஒதுக்கீடு தான். தமிழ்நாட்டில் உள் இட ஒதுக்கீடுகளை வழங்க திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
அண்டை மாநிலமான கேரளத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40%  இடஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரம் மற்றும் தெலுங்கானத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகவே இருந்தது. ராம்தாஸ் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகத் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு தனியாக ஏற்படுத்தப்பட்டது; இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சமூகநீதியில் பிற தென்னிந்திய மாநிலங்களை விட தமிழகம் பல படிகள் பின் தங்கிக் கிடக்கிறது. இதை சரி செய்ய திமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருவதன் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், அரசு பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல், தற்காலிக நியமனங்கள், குத்தகை நியமனங்கள், ஒப்பந்த நியமனங்கள் ஆகிய முறைகளில் பணியாளர்களை நியமிப்பதன் மூலம்  அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை மறைமுகமாக ஒழித்துக் கட்டியது  திமுக அரசு தானே. சமூகநீதியை இப்படியெல்லாம் படுகொலை செய்யும் திமுக அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா?
அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்கான அடிப்படைத் தேவை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தான். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி  வலியுறுத்தி வருகிறது.  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை பயன்படுத்தி தான்  இந்தியாவில்  கர்நாடகம், தெலுங்கானா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால்,  அதிகாரம் இல்லை என்று கூறி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மு.க.ஸ்டாலின் அரசு மறுப்பது ஏன்?
தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைந்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது திமுக அரசுதான்.  அப்படிப்பட்ட திமுகவுக்கு சமத்துவம் குறித்தோ, சாதி ஒழிப்பு குறித்தோ பேசுவதற்கு  தகுதி உண்டா?
தமிழ்நாட்டில் தந்தைப் பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை  நீக்குவதாகக் கூறி அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தை  திமுக அரசு இயற்றியது.  அந்த சட்டத்தின்படி  நியமிக்கப்பட்ட  24 அர்ச்சகர்களில் 10 பேர் தங்களை கருவறைக்குள் செல்ல அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் விடுவதில்லை; கோயிலை சுத்தம் செய்யும் பணி தான் வழங்கப்படுகிறது என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்த அவலத்தை போக்க திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்று பத்தாண்டுகளுக்கும் மேலாக  பணி வழங்கப்படாத  209 அர்ச்சகர்களுக்கு  பணி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின் இன்று வரை அதை நிறைவேற்றாதது தான் சமூகநீதியா?
சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கப் போவதாகக் கூறும் திமுக, அதன் 76 ஆண்டு கால  வரலாற்றில்  எத்தனை பட்டியலினத்தவரை பொதுத் தொகுதிகளில் நிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறது? திமுகவின் பட்டியலின முகமாக அறியப்படும் ஆ. இராசவைக் கூட, அவரது சொந்தத் தொகுதியான  பெரம்பலூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு, அங்கு நிறுத்தாமல் 350 கி.மீ தொலைவில் உள்ள நீலகிரிக்கு அனுப்பி வைத்த கட்சி தானே திமுக. பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்று திமுகவின் 3  முதன்மைப் பதவிகளில் ஒன்றை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கும் துணிச்சல்  திமுகவுக்கு உண்டா? இப்படியாக சமத்துவத்தை ஏற்படுத்தவும், சாதியை ஒழிக்கவும் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத  திமுக சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா?
தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதாக அரசாணை வெளியிட்ட அடுத்த நாளே  கோவை பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டிய இரட்டை வேடக் கட்சி தானே  திமுக? அப்படிப்பட்ட திமுக  அரசாணைகளை பிறப்பிப்பதன் மூலம் சாதியை ஒழிக்கப் போவதாக நாடகங்களை நடத்தக் கூடாது. மாறாக, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு, அரசு பணிகளை தற்காலிகமாக நிரப்பாமல், இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரந்தரமாக நிரப்புதல் ஆகியவற்றின் வாயிலாகத் தான் சாதியை ஒழிக்க முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.