பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி போலி ஆவணத்தை கொடுத்து கட்சியை திருடிவிட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போயிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகக் கூறிய ராமதாஸ், கட்சி திருடப்பட்டுவிட்டதாக அன்புமணியை மிக காட்டமாக விமர்சித்து பேசியிருந்தார். இத்தகைய சூழலில், போலி ஆவணங்களை அளித்து பாமக கட்சியை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக, ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அன்புமணிக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் ராமதாஸ் சார்பில் பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி புகார் அளித்தார். இது தொடர்பாக ஜி.கே. மணி போலீசாரிடம் அளித்துள்ள மனுவில், அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு டெல்லி காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ளதாக அன்புமணி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பா.ம.க அலுவலகத்தில் அன்புமணியின் ஆதரவாளரும், வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஜி.கே.மணி டெல்லியில் ஒரு புகார் கொடுத்ததாகக் கூறி அன்புமணி மீது அவதூறு கருத்தைத் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், அவர் மீது வழக்குத் தொடுப்போம். அவர் செய்த காரியம் சட்டவிரோதமானது, உண்மைக்கு புறம்பானது. பா.ம.கவையும், அன்புமணியையும் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு, ஜி.கே.மணியும் அவரது மகனும் கட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நோக்கத்தற்காகவும் இந்த வேலையை அவர் செய்திருக்கிறார்.
பா.ம.கவில் இந்த பிரச்சனை வந்ததில் இருந்து அவர்கள் எடுத்த அத்தனை முயற்சிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நடைப்பயணம் மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். மகாபலிபுரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்ற போது அதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள். டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறி அனைத்து பேரும் நகைக்ககூடிய வகையில் போராட்டம் நடத்தி அவமானத்தைப் பெற்றார்கள். இப்படி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். ஜி.கே.மணி அபாண்டமான பொய்யைச் சொல்லி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். அந்த புகாரில், குற்றம் நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை. முழுக்க முழுக்க களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி புகார் கொடுத்திருக்கும் ஜி.கே.மணி மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/gkbalu-2025-12-06-16-37-55.jpg)