பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளார். 

இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதே சமயம் ராமதாஸுக்குப் போட்டியாக  இன்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வடிவேல் ராவணன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், “தன்னைத்தானே தலைவர் எனச் சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுகிறார்.

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடக்கும் பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று (08.08.2025) விசாரணைக்கு வந்தது. பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸுக்குத் தனியாக நாற்காலி ஒன்று ஒதுக்கப்பட்டது. இருப்பினும் ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அந்த நாற்காலி காலியாவே இருந்தது. இதனையடுத்து இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மேலும் ஓராண்டுக்குத் தொடர்வார். அதன்படி அடுத்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் வரை பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது. 

Advertisment

அதே போன்று கட்சியின் பொதுச் செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் ஓர் ஆண்டுக்கு அப்பதவியில் தொடர்வார்கள். திமுக ஆட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில்  தமிழகத்தில் இதுவரை 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. எனவே திமுக அரசைச் சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த உறுதியேற்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.