'Anbumani should not be running around saying I am the leader; contempt of court' - Ramadoss interview Photograph: (pmk)
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''வழக்கம் போல் தைலாபுரம் தோட்டத்தில் வசிக்கின்ற நான் பாசத்தோடு வரவேற்கின்றேன். இந்த நிர்வாக குழுக் கூட்டம் என்னுடைய தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஒன்று, இரண்டு பேரை தவிர முக்கியமான வேலை இருப்பதனாலே வர முடியவில்லை. அந்த வகையில் இதில் முக்கிய முடிவுகளை நிர்வாகக் குழு அலசி ஆராய்ந்து எடுத்திருக்கிறோம்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தவாறும், நீதிமன்ற தீர்ப்பின் படியும் அன்புமணி பாமக தலைவர் என்று சொல்ல முடியாது. சொல்லக்கூடாது. ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினராக அவர் இருக்க முடியாது என்று செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு என மூன்று குழுக்களும் சொல்லிய பிறகும் அவர் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் என்று சொல்லி திரிகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
அதை ஊடகங்களாகிய நீங்கள் அவர் சொல்லுவதை வெளியிடக்கூடாது. நான்தான் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் என்று சொல்லித் திரிவதை ஊடகங்கள் வெளிப்படுத்தக் கூடாது என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். டெல்லி நீதிமன்ற தீர்ப்பின்படி பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சின்னம், கொடி, பெயர் இதை அன்புமணி உபயோகப்படுத்த கூடாது. அப்படி உபயோகப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். அதே மாதிரி ஊடகங்களும் கட்சியினுடைய தலைவர் என்று அன்புமணி சொல்வதை அப்படியே போடுகிறீர்கள். அதுவும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இனி அப்படி செய்ய வேண்டாம் என்று உங்களை பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று இந்த நிர்வாகக் குழுவில் கேட்டுக்கொண்டார்கள். ஏனென்றால் எனக்கு அந்த அதிகாரத்தை சேலத்தில் நடந்த பொதுக்குழு கொடுத்திருப்பதனாலே கூட்டணி பற்றி நாங்கள் விரிவாக இந்த நிர்வாகக் குழுவிலே பேசினோம். சீக்கிரம் ஒரு நல்ல முடிவை உங்களுக்கு அறிவிப்போம்'' என்றார்.
Follow Us