Advertisment

“சமூகநீதி துரோகி திமுக அரசு திருந்துமா?” - அன்புமணி சாடல்!

anbumani-mic

சமூகநீதி துரோகி திமுக அரசு திருந்துமா? என  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1267 நாள்களாகும் நிலையில், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள் வாழவே கூடாது; முன்னேறவே கூடாது என்று வன்மம் கொண்டு திமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

Advertisment

வன்னியர்களுக்கு இன்று வரை முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கான காரணம் திமுக அரசு தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான அறப் போராட்டங்களை ராமதாஸ் முன்னெடுத்தார். அந்தப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 1987ஆம் ஆண்டு இதே நாளில் ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை ராமதாஸ் தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரலாறு காணாத ஆதரவு பெருகியதை தாங்கிக் கொள்ள முடியாத அன்றைய அரசு காவல்துறையை ஏவி நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டாந்தடி தாக்குதலில் அப்பாவி வன்னியர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தங்களின் இன்னுயிரையே ஈந்த அவர்களின் தியாகம் மிகப்பெரியது. அவர்களை நான் வணங்குகிறேன். 

அதன்பிறகும் நீடித்த போராட்டத்தின் ஓர் அங்கமாக 1989ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் புறக்கணிப்பின் காரணமாகவே 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டிய திமுக, ஆட்சிக்கு வந்த இரு வாரங்களிலேயே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கபட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது 12.12.1988ஆம் நாள் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டிருந்த அரசாணையை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ராமதாஸை அழைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். அது மட்டும் செயல்வடிவம் பெற்றிருந்தால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரதிநிதித்துவம் பெற்றிருப்பார்கள். ஆனால், வேறு சிலரின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக தமது முடிவை மாற்றிக் கொண்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுடன் மேலும் 107 சாதிகளைச் சேர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். அன்றைக்கு அழுக வைத்துக் கொடுக்கப்பட்ட கனி தான் இன்று வரை வன்னிய மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கு காரணமாகும். 

sc

Advertisment

இட ஒதுக்கீடு பெற்று 32 ஆண்டுகளாகியும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்களுக்கு முன்னேற்றம் கிடைக்காததால் தான் 2020-21ஆம் ஆண்டில் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்து, அதிமுக ஆட்சியில் 10.50% உள் இட ஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால், சமூகநீதி பகைவர்கள் சிலர் அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கால் வன்னியர் ஒட ஒதுக்கீடு செல்லாமல் போனது. எனினும், வன்னியர்களுக்கு  உள் இட ஒதுக்கீடு பெற எல்லா உரிமைகளும் உள்ளது என்று கூறி, உரிய தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2022 மார்ச் 31ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால், அதிகபட்சமாக ஒரு மாதத்தில் தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாள்களாகியும் இன்று  வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. இதற்கான காரணம் இயலாமை அல்ல... வன்னியர்களுக்கு எந்தக் காலத்தில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அவர்கள் கல்வியும், வேலைவாய்ப்பும்  பெறாமல் சமூகத்தின் அடிமட்டத்திலேயே கிடக்க வேண்டும் என்ற வன்மம் தான் இதற்கு காரணமாகும்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை திமுக பல தருணங்களில் வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள்  தமிழக சட்டப்பேரவையில் வன்னியர் இடஓதுக்கீட்டுச் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட போது, அதை திட்டமிட்டே திமுக புறக்கணித்தது. அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வன்னியர் அல்லாத பிற சமூகங்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை செய்தது. வன்னியர் மீதான அந்த வன்மத்தின் தொடர்ச்சியாகவே மூன்றரை ஆண்டுகளாகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திராவிட மாடல் அரசு மறுத்து வருகிறது.

tn-sec

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நாள் முதல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்து வந்த திமுக அரசு, இப்போது சாதிவாரி மக்கள்தொகை விவரம் இல்லாததால் தான் இடஒதுக்கீடு வழங்க முடியவில்லை என்று கூறுகிறது. வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை விவரங்களைத் திரட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறவில்லை. ஒருவேளை மக்கள்தொகை விவரங்கள் தேவை என்றாலும் கூட அதை சேகரிப்பது தான் தமிழக அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கடமை ஆகும். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க போதிய சாதிவாரி விவரங்கள் இல்லாத நிலையில், அதற்காக அமைக்கப்பட்டிருந்த நீதியரசர் நாகமோகன்தாஸ் ஆணையம் 63 நாள்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 165 நாள்களில் ஒட்டுமொத்த அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு நினைத்திருந்தால் அதை விட குறைவாக காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட வழங்கியிருக்க முடியும். ஆனால், வன்னியர் மீதான வெறுப்புணர்வு தான் அதை தடுத்து விட்டது. 

பா.ம.க. நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம். ஆனால், திமுக அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் இப்போது சிறை நிரப்பும் போராட்டம் என்ற ஆயுதத்தை நாம் கைகளில் எடுத்திருக்கிறோம். இனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஒருபோதும் பாமக ஓயாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாள்கள் ஆகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும்  திமுக அரசைக் கண்டித்தும், இனியாவது சமூகநீதி துரோகத்தைக் கைவிட்டு வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் வரும் திசம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். நான் உள்ளிட்ட பாம..க. மூத்த தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்கும் இடங்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். குறைந்தது 5 லட்சம் பேராவது இந்தப்போராட்டத்தில் பங்கேற்று சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

social justice reservation anbumani ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe