கனிமக் கொள்ளை முடிவில்லாமல் தொடருகிறது. இதில் ஈடுபடும் கொள்ளையர்களுக்கு  திமுக துணைபோகிறது. எனவே சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் இருக்கன்துறை கிராமத்தில் ஒரே இடத்தில் 20 கருங்கல் குவாரிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக  கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள காணொலி செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தென் மாவட்டங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் துணையுடன் எல்லையில்லாமல்  கனிமக்கொள்ளை நடைபெறுவதாக நான் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டை இச்செய்தி உறுதி செய்திருக்கிறது.

Advertisment

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் இருக்கன்துறை கிராமத்தில் 20 கருங்கல் குவாரிகள் ஒரே இடத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குவாரிகளுக்கான குத்தகைக் காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அவை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், 25 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே கற்களை வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் 100 மீட்டர் ஆழத்திற்கும் மேலாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், அவை அனைத்தும்  கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. அதுமட்டுமின்றி, தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிமக்கொள்ளை தொடர்பாக நான் ஏற்கனவே கூறியிருந்த குற்றச்சாட்டுகளை இவை வலுப்படுத்துகின்றன.

Advertisment

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளைகளை நான் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் பா.ம.க. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விமானம் ஏறுவதற்காக திருவனந்தபுரம் நோக்கி மகிழுந்தில் நான் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் சாரை சாரையாக பெரிய சரக்குந்துகள் வந்து கொண்டிருந்ததை பார்த்தேன். அவை எங்கு செல்கின்றன என்று விசாரித்த போது, தென் மாவட்டங்களில் உள்ள சட்டப்படியான கல் குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாகவும், சட்டவிரோத கல் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, இந்த சரக்குந்துகள் மூலமாக கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப் படுவதாகவும், அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட கனிம வளங்களை இறக்கி விட்டு, அடுத்த சுமையை ஏற்றுவதற்காக கல்குவாரிகளுக்கு அந்த சரக்குந்துகள் செல்வதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

anbumani-mic-1

கல்குவாரிகளில் இருந்து சரக்குந்துகளில் அதிக அளவாக 13 டன் அளவுக்கு மட்டும் தான் கற்கள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு சரக்குந்திலும் 30 டன் அளவுக்கு கற்கள் கடத்திச் செல்லப் படுகின்றன. அதுமட்டுமின்றி ஒருமுறை வாங்கப்பட்ட அனுமதிச் சீட்டை பயன்படுத்தி ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட முறை கனிமங்கள் கேரளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் முதன்மைக் கடமை ஆகும். ஆனால், ஆட்சியாளர்கள் இதைக் கண்டு கொள்வதில்லை என்பது மட்டுமின்றி, இந்தக் கொள்ளைக்கு முழுமையாக துணை போகின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான் இந்தக் கொள்ளைகளுக்கு காட்பாதராக இருந்து வழிநடத்துகிறார் என்று ஏற்கனவே பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளேன். அந்தக் குற்றச்சாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். அவரை மீறி கனிமக் கொள்ளையர்களுக்கு எதிராக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது; அவ்வாறு நடவடிக்கை  எடுக்கும் அதிகாரிகள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பணியில் நீடிக்கவும் முடியாது. அந்த அளவுக்கு திமுக அரசாங்கத்தில் காட்பாதரின் செல்வாக்கு கொடிகட்டி பறக்கிறது.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் கனிமக் கொள்ளைகள் குறித்து 2022ஆம் ஆண்டு 54 குவாரிகளில்  நடத்தப்பட்ட ஆய்வில் 53 குவாரிகளில் கனிமக் கொள்ளை நடந்தது தெரியவந்தது. அவற்றில் 24 குவாரிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கும் மேலான சாதாரண கற்கள் மற்றும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அவற்றுக்கு ரூ. 262 கோடி  அபராதம் விதிக்கப்பட்டதாகவும்  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது. ஆனால், காட்பாதரின் தலையீட்டைத்  தொடர்ந்து ரூ. 262 கோடி அபராதம் வெறும் ரூ.13.8 கோடியாக குறைக்கப்பட்டதுடன், அதை தவணை முறையில் செலுத்தவும் ஆணையிடப்பட்டது. இதிலிருந்தே காட்பாதரின் செல்வாக்கையும், கனிமக்கொள்ளைக்கு ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை துணைபோவதையும் புரிந்து கொள்ள முடியும்.

siren-police

இராதாபுரம் தொகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை போதாதென புதிது புதிதாக புதிய குவாரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதற்கான கருத்துக்கேட்புக் கூட்டங்களின் போது எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் காட்பாதரின் ஆள்களால் தாக்கப்படுவார்கள். குவாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிய நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி. சுரேஷை காட்பாதரின் ஆள்கள் தாக்கியுள்ளனர் என்பதிலிருந்தே இராதாபுரத்தில் மட்டும் தனி ஆட்சி நடைபெறுவதையும், அங்கு சட்டத்திற்கும், ஒழுங்குக்கும் இடமில்லை என்பதையும் உணரலாம்.

இராதாபுரம் பகுதியில் மட்டும் 100 குவாரிகள் இயங்கக் காரணம் என்ன? என்ற வினா ஆட்சியாளர்களுக்கு எழுந்திருக்க வேண்டாமா? அங்கு வெட்டி எடுக்கப்படும் கற்களில் 95% கேரளத்திற்கு தான் கடத்திச் செல்லப்படுகின்றன. கேரளத்தில் கற்களை வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தின் தேவையை நிறைவேற்ற தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க திமுக அரசு துணை போவதை விட தமிழ்நாட்டின் நலன்களுக்கு செய்யப்படும் பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது.

anna-arivalayam

திமுக ஆட்சிக்கு வந்த முதல் சில ஆண்டுகளில் மட்டுமே தென் மாவட்டங்களில் சுமார் ரூ.1000 கோடிக்கு கனிமக் கொள்ளை நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இருக்கன் துறை குவாரிகளில் மட்டும்  ரூ. 500 கோடிக்கு கனிமக்கொள்ளை நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தக் கொள்ளையையும் கணக்கிட்டால் அதன் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். திமுக அரசு இதுகுறித்து ஆணையிட மறுத்தாலும் அடுத்த இரு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு  அமையவிருக்கும் அரசின் மூலம் கனிமக் கொள்ளை குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.