அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யுரைத்து வந்த நிலையில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில், விடியல் எங்கே? என்ற ஆவணத்தை தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26ஆம் நாள் வெளியிட்டேன். அந்த ஆவணத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளை பட்டியலிட்டிருந்தேன். வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகக் கூறியிருந்த நான், அவற்றையும் அந்த நூலில் பட்டியலிட்டிருந்தேன். அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டது மட்டுமின்றி, அவற்றில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது; எந்த அளவுக்கு செயல்படுத்தப்படவில்லை என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன். அதை திமுக அரசால் மறுக்க முடியவில்லை.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சக அமைச்சர்கள் இருவருடன் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்,‘‘திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை’’ என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்; அதைத் தவிர வேறொன்றுமில்லை. வாக்குறுதிகளின் எண்ணிக்கையை மட்டுமே அமைச்சர் தெரிவித்தாரே தவிர, அவற்றின் பட்டியலை வெளியிட வில்லை. இதிலிருந்தே பா.ம.க.வின் குற்றச்சாட்டுக்கு திமுகவிடம் பதில் இல்லை என்பதை அறியலாம்.
அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் எவ்வாறு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளாக கருத முடியும்? என்று தெரியவில்லை. அமைச்சர் கூறுவதைப் போல 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கூட தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றை அரசு வெளியிட்டு இருந்திருக்கலாம். செய்யாத சாதனைகளையே செய்ததாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, யாருக்கும் பயனற்ற அரசாணை பிறப்பித்திருந்தால் கூட அதைக் கொண்டாடியிருக்கும். ஆனால், அதை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்யவில்லை. ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் வீசப்பட்டதைப் போல, பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை எல்லாம் கூவம் ஆற்றிலும், அடையாறு ஆற்றிலும் திராவிட மாடல் அரசு வீசி விட்டதோ, என்னவோ தெரியவில்லை.
ஒருவேளை அரசாணைகளே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும் தான் அது நிறைவேற்றப்பட்டதாக பொருள் ஆகும். அரசாணைகள் எனப்படுபவை ஏட்டுச் சுரைக்காய்கள் தான். அவற்றைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவதைப் போல அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றபட்டவையாக கருத வேண்டும் என்றால், அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவதைப் போல, ‘‘சீனி சக்கரை சித்தப்பா.... ஏட்டில் எழுதி நக்கப்பா’’ என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் இருக்குமே தவிர மக்களுக்கு பயன்படாது.
திமுக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன? என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். 2021ஆம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், 221 வாக்குறுதியாக,‘‘மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை மிச்சமாகும்’’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மின்துறை அமைச்சரிடம் கேட்ட போது, அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்திர மின் கட்டண வசூல் நடைமுறைக்கு வரும் என்று பதிலளிக்கிறார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு தான் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லை. ஏன் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று கேட்டால் ஸ்மார்ட் மீட்டரை காரணம் காட்டுவார்கள்.
திமுக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே தொடரும் என்ற நிலையில், எப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பது தெரியவில்லை. இப்படியாக திமுக அரசின் அனைத்து விளக்கங்களுமே, ‘‘அத்தைக்கு மீசை முளைத்தால்’’ என்ற ரீதியில் தான் உள்ளன. அத்தைக்கு ஒரு போதும் மீசை முளைக்காது; திமுக அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்பது தான் உண்மை. அதேபோல், திமுகவால் இனி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது தான் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும். நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.
இல்லாவிட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்; தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.