Advertisment

“என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை” - அன்புமணி திட்டவட்டம்

anse

Anbumani says The meeting to be held in Salem is not the general meeting of the PMK

பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், சேலத்தில் வருகிற 29ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு பா.ம.க பொதுக்குழு அல்ல என அன்புமணி தெரிவித்துள்ளார். பா.ம.கவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவாக ஒவ்வொரு ஆண்டும் பா.ம.க சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி நடத்துவார்கள். கடந்த ஆண்டு இதே போன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆன நிலையில், இந்த ஆண்டும் வருகிற 29ஆம் தேதி சேலத்தில் பொதுக்குழு நடைபெறும் என ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு பா.ம.கவின் பொதுக்குழு அல்ல என அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பா.ம.கவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு  கூட்டங்கள் வரும் 29ஆம் தேதி சேலம் ஐந்து சாலை இரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பா.ம.க தலைமை வெளியிடவில்லை. பா.ம.கவின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும்  ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பா.ம.கவின் தலைவர் அன்புமணி இராமதாஸ் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பா.ம.கவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது. எனவே, சேலத்தில் 29ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் அனைவருக்கும்  தெரிவித்துக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

anbumani pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe