காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே விளம்பர மாடல் அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி. ஏ. பி, பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரம் வைக்க முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர். உழவர்களின் இந்தத் துயரத்தையறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிந்து விட்ட நிலையில் அந்த பகுதிகளில் தாளடி பருவ நெல்லும், மற்ற பகுதிகளில் சம்பா பருவ நெல்லும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நடவுக்கு முன்பாக அடியுரமும், நடவு நட்ட சில நாள்களில் மேலுரமும் இட வேண்டும். அப்போது தான் நெற்பயிர்கள் ஓரளவு வளர்ந்து வடகிழக்கு பருவமழையை சமாளித்து நிற்க முடியும். ஆனால், உரம் கிடைக்காததால் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் உரம் இட முடியாமல் தங்கள் பயிர் என்னவாகுமோ? என்ற கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர். வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு அமைப்புகளின் பணியாளர்களும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் வழங்கப்படாததால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது.
சில தனியார் கடைகளில் உரம் கிடைக்கிறது என்றாலும், அவர்கள் ரூ. 300 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியாவுடன் ரூ.200 மதிப்புள்ள சத்து குருணை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். எந்த கடையிலும் வெறும் யூரியா மட்டும் வழங்க மறுக்கின்றனர். யூரியாவுடன் தேவைப்படாத சத்துக் குருணையையும் சேர்த்து வாங்கும் போது ஏக்கருக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதலாக செலவாகிறது. ஏற்கனவே நெல்லுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் உழவர்களுக்கு இந்தக் கூடுதல் செலவு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
ஒரு மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படும் போது, அதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். ஆந்திரம், தெலுங்கானம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட உரத்தட்டுப்பாட்டை அந்த மாநிலங்களின் அரசுகள் மிகச் சிறப்பாக கையாண்டன. ஆனால், தமிழக அரசு இதிலும் தோல்வி அடைந்து விட்டன. இத்தனைக்கும் கடலூர் மாவட்டம் தான் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமாகும். அந்த மாவட்டத்திலேயே உரத்தட்டுப்பாட்டைப் போக்க முடியாத அமைச்சர், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உரத்தட்டுப்பாட்டை எவ்வாறு போக்குவார் என்ற உழவர்கள் வினா எழுப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாட்டைத் தடுப்பது பெரிய விஷயமல்ல. தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் சம்பா, தாளடி பயிர்களின் சாகுபடி தீவிரமடையும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை எதிர்பார்த்து தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்படுவதை உறுதி செய்தால் உரத்தட்டுப்பாட்டைத் தடுத்து விடலாம். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் இத்தகைய முன்னேற்பாடுகள் எதையும் அரசு செய்யவில்லை. நடப்பாண்டில் தெலுங்கானா மாநிலத்தில் கடுமையான உரத்தட்டுப்பாடு ஏற்பட்ட போது, தமிழகத்திலும் அதே போன்று உரத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று உழவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குத் தேவையான 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 டன் டிஏபி, 12,422 டன் பொட்டாஷ், 98,623 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 1,54,000 டன் உரங்களை வழங்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 16ஆம் நாள் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அதன்பின் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், எந்தவிதமான தொடர் நடவடிக்கைகளும் எடுக்காததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டிருக்கும் உரத்தட்டுப்பாடு ஆகும். உரத்தட்டுப்பாட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு இன்னும் தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொண்டு உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து வேளாண்மை தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உரங்களை உழவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழகத்திற்கு தேவையான உரங்களின் விவரம் ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த உரங்களை பெற்று உழவர்களுக்கு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.