பா.ஜ.க.வுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார். அந்த வகையில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2025) பங்கேற்றுள்ளார். 

இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிகாருக்கு சென்றுள்ளார். புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பிகாரின் புத்த கயாவில் தான் இருந்தது. அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங்,  சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பிகார் தான்.

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பிகார் தான். அத்தகைய சிறப்பு மிக்க பிகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.