தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக்கூடாது. உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நாளை மறுநாள் திசம்பர் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 700 பேர் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கோரிய சான்றிதழ்களை அவர்களால் பதிவேற்றம் செய்ய முடியாதது தான்.

Advertisment

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாததற்கு  தேர்வர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. அவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை குறித்த காலத்திற்குள் இணையம் வாயிலாக நிரப்பி விட்டனர். அதன்பின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளில்  இணையதளம் முடங்கியதால்  அவர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.  அதனால் அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வகையில் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்ட தேர்வர்களில் 22 பேர் மட்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி தேர்வு எழுத அனுமதி பெற்றுள்ளனர். அவர்களின் மூலச் சான்றிதழ்களை நேரடியாக வாங்கிக் கொள்ள  ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுவதற்கு வாய்ப்பும், வசதியும் இல்லாதவர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பு  கிடைக்கவில்லை.

Advertisment

வழக்கமாக இது போன்ற சிக்கல்கள் எழும் போது நீதிமன்றம் ஒருவருக்கு அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்  நிவாரணம் வழங்குவதை ஆள்தேர்வு அமைப்புகள்  வாடிக்கையாக வைத்திருந்தன. ஆனால், இந்த முறை அவ்வாறு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மறுக்கிறது. இணையதளம் முடங்கியதும்,  அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படாததும்  தேர்வர்களின் பிழை அல்ல; அது முழுக்க முழுக்க தேர்வு வாரியத்தின் தவறு. அதற்காக தேர்வர்கள் பாதிக்கப்படக் கூடாது.

தமிழ்நாட்டில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ஆள்தேர்வு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடைபெறுகிறது. இனி இத்தகைய ஆள்தேர்வு எப்போது நடைபெறும் என்பது தெரியாது. எனவே, அவர்களுக்கு இப்போதே  வாய்ப்பு வழங்குவது தான் சமூகநீதியாக இருக்கும். எனவே, பாதிக்கப்பட்டிருக்கும் 700 பேருக்கும் சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியை மீண்டும் ஏற்படுத்துவதன் வாயிலாகவோ அல்லது  மூலச் சான்றிதழ்களை நேரடியாக தாக்கல் செய்ய அனுமதிப்பதன் வாயிலாகவே அவர்களை  நாளை மறுநாள் நடைபெறவுள்ள தேர்வை எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment