Advertisment

“இது தான் சட்டம் - ஒழுங்கை காக்கும் லட்சணமா?” - அன்புமணி விளாசல்!

anbumani-mic-4

காவல் நிலையத்தில் அதிகாரி முன்னிலையில் பாமக நிர்வாகியின் கழுத்தை ரவுடிகள் அறுத்துள்ளனர். இது தான் சட்டம் - ஒழுங்கை காக்கும் லட்சனமா? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த பா.ம.க. நிர்வாகி ஒருவரை காவல்துறை உதவி ஆய்வாளர் முன்னிலையில் கஞ்சா போதை கும்பல் கழுத்தை அறுத்து படுகொலை செய்ய முயற்சி செய்துள்ளது. திமுக ஆட்சியில் காவல் நிலையங்களில் கூட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீரழிந்திருப்பதற்கு இது தான் சான்றாகும்.

Advertisment

அச்சிறுப்பாக்கம் வட்டம் மதூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் செல்வராஜ், வினோத், விக்னேஷ், சந்தோஷ்குமார், சேகர் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு கஞ்சா போதையில் வந்த பாதிரி காலனியைச் சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட 5 பேர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் தகராறு செய்தனர். இது தொடர்பாக பாமகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயகுமார் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதேநேரத்தில் எந்தத் தவறும் செய்யாத பாமகவினர் மீதும் காவல்துறையினர் பொய்வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இரு தரப்பினரும் அண்மையில் நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப்பட்டு கடந்த சில நாள்களாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.

Advertisment

பா.ம.க. நிர்வாகிகள் 5 பேரும் நேற்று (01.11.2025) காலை அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுக் கொண்டு இருந்த போது, அங்கு கஞ்சா போதையில் வந்த விஜயகுமாரும் மற்றவர்களும் பாமகவினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக காவல் நிலைய  உதவி ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட காவலர்கள் கண் எதிரிலேயே பாமக நிர்வாகி வினோத் என்பவரை விஜயகுமாரும் மற்றவர்களும் கழுத்தை அறுத்து படுகொலை செய்ய முயன்றனர். இதில் கழுத்தறுபட்ட வினோத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

inves-1

அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்த கொடுமைகளுக்கு அப்பகுதியில் நிலவும் கஞ்சா புழக்கம் தான் காரணம். பா.ம.க. நிர்வாகி வினோத்தை கழுத்தை அறுத்து படுகொலை செய்ய முயன்ற விஜயகுமார் மீது கொலை வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பா.ம.கவினருடன் மோதலில் ஈடுபடும் போதும், காவல்நிலையத்தில் வினோத்தை கழுத்தை அறுத்து படுகொலை செய்யும் போதும் விஜயகுமாரும் அவரது கூட்டாளிகளும் கஞ்சா போதையில் தான் இருந்துள்ளனர். மதூர் மற்றும் பாதிரி கிராமங்களில் கஞ்சா கட்டுப்பாடின்றி விற்கப்படுவதை தடுத்திருந்தாலே இரு தரப்புக்கும் இடையிலான மோதலும், கொலை முயற்சியும் நடந்திருக்காது. இதற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முன்னிலையிலேயே பாமக நிர்வாகியை ரவுடிகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், அதைத் தடுப்பதற்குக் கூட காவல்துறையினர் முயற்சி செய்யவில்லை. காவல் நிலையத்திலேயே இப்படி என்றால், பொது வெளிகளில் கஞ்சா போதையில் ரவுடிகள் செய்யும் அட்டூழியங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படியானால், அப்பாவி மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்பதை ஆட்சியாளர்கள் தான் விளக்க வேண்டும்.

tn-sec

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள்களில் புழக்கமும், சட்டம் - ஒழுங்கும் ஒரே திசையில் பயணிப்பதில்லை; இரண்டும் எதிரெதிர் திசையில் பயணிக்கக் கூடியவை. போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரிக்க அதிகரிக்க சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதை தடுக்க முடியாது. அதனால் தான் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. ஆனால், கஞ்சாவை ஒழித்து சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்கு திமுக அரசு இன்று வரை எதையுமே  செய்யவில்லை.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் தான் சீரழிவுப் பாதையில் கொண்டு செல்லப் போகிறது. திமுக ஆட்சியாளர்கள் மிகவும் தாமதமாகவாவது இதை உணர்ந்து தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் பா.ம.க. நிர்வாகி வினோத்தை கழுத்தை அறுத்து படுகொலை செய்ய முயன்ற விஜயகுமார் உள்ளிட்ட ஐவர் மீதும் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பாமக நிர்வாகி வினோத்துக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன், அவருக்கு  ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

mk stalin dmk govt tn govt law and order police station anbumani ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe