சிறுநீரகத் திருட்டு வழக்கின் விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதன் மூலம் இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்களை காப்பாற்ற முயல்வதா? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டையே அதிர வைத்த நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து தென்மண்டலக் காவல்துறை தலைமையில் விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிறுநீரகத் திருட்டு விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய அரசே குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் கொள்ளையடித்ததாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து தான் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தமிழக அரசும் ஒப்புக்கொண்டதுடன் இது தொடர்பாக விசாரணை நடத்துவதைப் போல நாடகம் ஆடியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, அங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டும் தடை விதித்தது.
கிட்னி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க அரசு முயல்வதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் நிஷா , சிலம்பரசன், கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆணையிட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி திருட்டு குறித்து விசாரித்து செப்டம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். அதன்படி இன்னும் 4 நாள்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. இதன் நோக்கத்தை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
கிட்னி திருட்டு குறித்து துறை சார்ந்த விசாரணை நடத்தப்போவதாக தமிழக அரசு கூறிய போதே, அதில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதன்படியே உயர்நீதிமன்றமும் ஆணையிட்டிருந்த நிலையில், அதை எதிர்கொள்ள திமுக அரசு அஞ்சுகிறது. பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சிறுநீரகங்கள் திருடப்பட்டு பிறருக்கு பொருத்தப்பட்ட நிகழ்வுகள் நடந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது; சிறுநீரகத் திருட்டில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தரகரும் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர்கள் சிக்கிக் கொண்டால் சிறுநீரகத் திருட்டின் பின்னணியில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்பதால் தான் இந்த விசாரணையை தடுக்க திமுக அரசு முயல்கிறது.
தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா? அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா? எனத் தெரியவில்லை. சிறுநீரகத் திருட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும்; சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.