தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்களையொட்டி டிசம்பர் 14ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/11/anbumani-mic-3-2025-12-11-12-12-29.jpg)
இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20.12.2025 (சனிக்கிழமை) வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப் பட்ட நாள்களில் தினமும் காலை 11.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/11/anbumani-application-2025-12-11-12-11-48.jpg)