4 லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது என்றும் 2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக 2026ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை வெளியிடவில்லை. ஆசிரியர் பணிக்கு செல்லத் துடிக்கும், ஆசிரியர் பணியில் சேர்ந்து அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு திசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அப்போது தான் அந்தத் தேர்வுககளை எழுத விரும்புபவர்கள் திட்டம் வகுத்து தயாராக வசதியாக இருக்கும். அதிலும் குறிப்பாக 2026ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்பதாலும் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.
இவ்வளவு அதிக தேவைகள் இருந்தும் கூட, 2026ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாதது அதன் அலட்சியத்தையும், பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் இந்த அலட்சியம் பல்வேறு தரப்பினருக்கு மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய 1205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையும், நவம்பர் மாதம் வெளியிடப் பட்டிருக்க வேண்டிய 51 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால் அந்தப் பணிகளுக்காக காத்திருந்த ஆசிரியர் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்களை விட, 2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்து தகுதித் தேர்வை நிறைவு செய்யாதவர்கள் தான் 2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு அட்டவணைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும், தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், 2011ஆம் ஆண்டுக்கு முன் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த 4 லட்சம் ஆசிரியர்கள் பணியில் நீடிக்கும் தகுதியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காண உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மாறி, மாறி முடிவெடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 4 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி பேச்சு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதன்பின்னர் நிலையை மாற்றிக் கொண்ட தமிழக அரசு, 2026ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் 13&ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2026 ஜனவரி 24, 25 ஆகிய சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை கடந்த நவம்பர் 19ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால், அறிவிக்கை வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது. இது ஆசிரியர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்த 6 நாள்களில் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றிக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பதை ரத்து செய்யும் வகையில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 23&ஆம் பிரிவில் திருத்தம் செய்யும்படி கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆசிரியர்களின் நலன்களை பாதுகாக்கும் விஷயத்தில் 3 முறை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட திமுக அரசு, அவற்றில் எந்த நிலைப்பாட்டையும் சாத்தியமாக்க துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கும் உண்மையாகும்.
ஆசிரியர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டும், சிறுநீரகத் திருட்டு வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகளை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்த வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்த திமுக அரசு, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்றுடன் 110 நாள்களாகியும் அதை விசாரணைக்கு கொண்டு வருவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பின் 53 நாள்களாகியும் எந்த தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எளிமையான பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் சிறப்புத் தகுதித் தேர்வை நடத்தியிருந்தால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் பணிகளை உறுதி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், எந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்காமல் ஆசிரியர்களின் எதிர்காலத்தை இருளிலேயே திமுக அரசு வைத்திருக்கிறது. திமுக அரசின் அதிகாரம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வரப்போகிறது. ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, திமுக அரசுக்கு 6 மாதப் பதவிக்காலம் மீதமிருந்தது. அந்தக் காலத்தில் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க திமுக அரசு எதேனும் நடவடிக்கை எடுக்கும் என்று ஆசிரியர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை திமுக அரசு இதுவரை காப்பாற்ற வில்லை. நம்பிய ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டு விடாமல், எளிய பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் கூட சிறப்புத் தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/18/anbumaniori-2026-01-18-10-41-33.jpg)