பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

Advertisment

இதனிடையே, ராமதாஸ் தரப்பினரும் அன்புமணி தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில் அவர், “அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை. அன்புமணியை கட்சியிலிருந்து, ராமதாஸ், நீக்கி விட்டார். அன்புமணி கட்சி பொறுப்பிலும் இல்லை. உறுப்பினரும் இல்லை. எங்களுக்கு அதிகமாக செல்வாக்கு இருக்கிறது என்று போலியாக ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றம் செய்து கூட்டணி பேசுவதற்கு முயற்சி செய்யும் நடவடிக்கையை அன்புமணி செய்கிறார். மக்களை திசை திருப்புவதற்கும் கூட்டணி கட்சிகளோடு பேசுவதற்கும் ஒரு நாடகமாக இருக்குமே தவிர இது உண்மையல்ல” எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், ஜி.கே.மணியை பா.ம.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தரப்பு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளதாவது, ‘பா.ம.கவைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை  ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாமகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025&ஆம் நாள்  றிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் அன்புமணி அறிவித்திருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக பா.ம.க தலைவராக இருந்த ஜி.கே.மணியை கட்சியில் இருந்து அன்புமணி தரப்பு நீக்கியிருப்பது உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

Advertisment

முன்னதாக, கூட்டணி தொடர்பாக அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. பா.ம.க சமூகநீதி பேரவை பெயரில் வெளியான பொது அறிவிப்பில், பா.ம.கவுடான கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணியிடம் நடத்தக்கூடாது என்றும் அதனை மீறி அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.