''Anbumani removed from PMK'' - Ramadoss takes action Photograph: (PMK)
கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக அன்புமணி மீது ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை குழு பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அன்புமணி பதிலளிக்க அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் அன்புமணி தரப்பில் எந்த பதில்களும் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று (11/09/2025) விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், ''எந்த அறிவுரையும் அன்புமணி கேட்கவில்லை.எனவே பாமகவின் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுக்கிறேன். தந்தை சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வதில் தவறில்லை. பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்படுகிறார். பாமக நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது. அன்புமணிக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறினாலும் ஏற்கும் நிலையில் அன்புமணி இல்லை. அவர் ஒரு அரசியல்வாதி எனும் தகுதியை இழந்து விட்டார். அன்புமணி ராமதாஸ் என பெயர் போட்டுக் கொள்ளக் கூடாது இரா.என்ற இன்சியல் மட்டுமே அன்புமணி போட்டுக் கொள்ளலாம்.
விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்த பிறகு அன்புமணி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாரும் செய்யாத விரோத நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அன்புமணி மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் இதுவரை எந்த பதிலும் அவர் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அவர் மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக் கொண்டதாகக் கருதப்படும். இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதிலளிக்காததால் தற்பொழுது அவர் நீக்கப்பட்டுள்ளார். மிகவும் போராடி பாமகவை வளர்த்தேன். தனி மனிதனாக பாமகவை தொடங்கினேன். இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. தேவைப்பட்டால் அன்புமணி தனியாக கட்சி ஆரம்பித்து கொள்ளலாம். அன்புமணியுடன் உள்ள 10 பேருக்கும் நான் எதிர்பாராத உதவிகளை செய்திருக்கிறேன். அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் மன்னிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த முடிவு பாமகவிற்கு எந்த பின்னடைவும் இருக்காது. வளர்ச்சிக்கு தடையாக இருந்த களையை நீக்கிவிட்டேன்'' என்றார்.
Follow Us