பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே, அன்புமணியை பா.ம.க செயல் தலைவர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இதன் காரணமாக, பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது.
இதனிடையே, பாமக எம்எல்ஏ அருளை கட்சியிலிருந்து நீக்கியதோடு அவர் வகித்து வரும் கொறடா பதவியைப் பறிக்க வேண்டும் என அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் நேற்று சபாநாயகரிடம் மனு வழங்கி இருந்தனர். அதேநேரம் சேலம் பாமக எம்எல்ஏ அருளும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தானே கொறடாவாக நீடிப்பதற்கான கடிதத்தை காண்பித்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். இப்படி, பா.ம.கவில் தினந்தோறும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மனு அளிக்க உள்ளனர். அந்த வகையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்களான சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரி மனு அளிக்கவுள்ளனர்.
முன்னதாக, பா.ம.க கட்சி அலுவலக முகவரி மாற்றம், அன்புமணி தலைவர் பதவி நீட்டிப்பு என தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தரப்பினர் தவறான தகவலை கொடுத்துள்ளனர் என்று ஜி.கே மணி நேற்று குற்றச்சாட்டியிருந்தார். மேலும், நேற்று டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பா.ம.க தொடர்பான ஆவணங்களையும், தகவல்களையும் வழங்கியதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.